‘ஹெல்மெட்’ அபராதம் விதிப்பதில் குளறுபடி

சென்னையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில், சாலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சியை வைத்து, விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கு, கமிஷனர் அலுவலகத்தில், 10 பேர் குழுவினர், சுழற்சி முறையில் பணியில் உள்ளனர்.

அவர்கள் நாள் ஒன்றுக்கு, 2,000 முதல் 3,000 வழக்குகள் பதிவு செய்து வருகின்றனர். கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்காணித்து, ‘ஹெல்மெட்’ அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.

அதேபோல், வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாரும், ‘ஹெல்மெட்’ அணியாத நபர்களை மடக்கி அபராதம் விதிக்கின்றனர்.

இதனால், ஒரே நாளில், ஒரு நபருக்கு கண்காணிப்பு கேமரா வாயிலாகவும், போலீசார் வாயிலாகவும், தலா 1,000 ரூபாய் என, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்டோர், அபராதம் விதிப்பு குளறுபடிகளை தவிர்க்க, அபராதம் விதிப்பதை முறைப்படுத்த வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தனர்.

இது குறித்து, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறியதாவது:

அபராதம் விதிக்க தரப்பட்ட கருவி வாயிலாக, ஏற்கனவே உள்ள வழக்குகள் விபரத்தை பார்க்க முடியும்.

கண்காணிப்பு கேமரா வாயிலாக பதிவாகும் வழக்குகள், தங்களிடம்உள்ள கருவியில் காட்டாது. வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்ட விபரம் உடனே தெரியாது.

ஒரே நபருக்கு இரண்டு அபராதம் விதிக்கப்படுவது குறித்து, மேல் அதிகாரிகள் தான் தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, போக்குவரத்து எஸ்.ஐ., ஒருவர் கூறியதாவது:

கடந்தாண்டு விதிமீறல் தொடர்பாக, கண்காணிப்பு கேமரா வாயிலாக போடப்பட்ட வழக்குகள் தான் அதிகம்.

போலீசார் வழக்கு பதிந்து, 5 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கும் அதே வேளையில், கண்காணிப்பு கேமரா பதிவு வழக்குகள் வாயிலாக, 7 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.

வாகன தணிக்கையில், எஸ்.ஐ.,யுடன் ஒரு போலீஸ்காரர் மட்டுமே இருக்க வேண்டும் என, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால், விதிமீறலில் ஈடுபடுவோரை மடக்கி, வழக்கு பதிவு செய்வது சவாலாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *