பொது பயன்பாட்டு இட விபரம் வெளியிட தயக்கம் ஆக்கிரமிப்பை சி.எம்.டி.ஏ. , தடுக்குமா?
சென்னை, பொது பயன்பாட்டு இடங்களின் விபரங்களை வெளியிடுவதை, சி.எம்.டி.ஏ., நிறுத்தி உள்ளது, ஆக்கிரமிப்புகளுக்கு வழிவகுப்பதாக புகார் எழுந்துள்ளது.
பொது கட்டட விதிகளின் அடிப்படையில், சென்னை பெருநகரில் மனைப்பிரிவுகள், அடுக்குமாடி கட்டுமான திட்டங்களுக்கு, சி.எம்.டி.ஏ., ஒப்புதல் வழங்குகிறது.
ஒப்புதல் வழங்கும்போது, திட்டத்துக்கான நில பரப்பில், 10 சதவீத இடத்தை பொது பயன்பாட்டுக்காக, ஓ.எஸ்.ஆர்., என்ற தலைப்பில், திறந்தவெளி ஒதுக்கீடாக பெறப்படும்.
தற்போதைய நிலவரப்படி, 1.07 லட்சம் சதுர அடிக்கு மேற்பட்ட திட்டங்களில், 10 சதவீத நிலம் ஒப்படைப்பது கட்டாயம்.
புதிய கட்டட அனுமதி கோரி விண்ணப்பிக்கும்போது, இதுபோன்ற ஓ.எஸ்.ஆர்., நிலங்களை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் பெயரில், தான பத்திரம் வாயிலாக, கட்டுமான நிறுவனங்கள் ஒப்படைக்கும்.
இந்த ஆவணத்தின் பிரதி, கட்டுமான திட்ட விண்ணப்பத்துடன் இணைக்கப்படும்.
இவ்வாறு ஒப்படைக்கப்படும் நிலத்தை, உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து, அதில் பூங்கா உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தும்.
இதில் பெரிய அளவிலான மனைப்பிரிவு திட்டங்களில், பொது பயன்பாட்டுக்கான பெறப்படும் நிலங்களின் விபரங்களை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் வெளிப்படையாக அறிவித்து வந்தனர்.
இதனால், மனையை வாங்க வரும் மக்கள், இந்த விபரங்களை அறிந்து, பொது இடங்களை தவறுதலாக வாங்குவது தவிர்க்கப்படும். மேலும், அந்த மனைப்பிரிவில் குடியேறுவோர், பொது பயன்பாட்டு இடத்தை தனியார் ஆக்கிரமிப்பதை தடுக்க முடியும்.
இதுகுறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:
கடந்த, 2013 முதல் 2019 வரையிலான காலத்தில், மனைப்பிரிவு திட்டங்களில் பெறப்பட்ட பொது பயன்பாட்டு இடங்களின் விபரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இது, பொது மக்களுக்கும், அரசின் பல்வேறு துறையினருக்கும் உதவும் வகையில் அமைந்து இருந்தது.
ஆனால், 2020 முதல் இந்த விபரங்களை வெளியிடுவதை, சி.எம்.டி.ஏ., நிறுத்திவிட்டது. இதனால், எந்தெந்த மனைப்பிரிவுகளில் பொது பயன்பாட்டு இடங்கள் காலியாக உள்ளன என்ற விபரங்கள் ரகசியமாகிவிட்டன.
சமீபத்தில், ஒரு ஏக்கருக்கு மேற்பட்ட ஓ.எஸ்.ஆர்., நிலங்கள் குறித்த விபரங்களை திரட்ட சி.எம்.டி.ஏ., முயற்சித்தது. இந்நடவடிக்கை முழுமை அடையவில்லை.
இப்போதாவது, இருப்பில் உள்ள ஓ.எஸ்.ஆர்., நிலங்கள் குறித்த விபரங்களை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் ஆக்கிரமிப்புகளை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.