சுகாதார சீர்கேடில் தவிக்கும் வடசென்னை: துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை
தண்டையார்பேட்டை : சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டலத்தில், 34 வார்டு முதல் 48வது வார்டு வரை என, 15 வார்டுகள் உள்ளன. அதேபோல, ராயபுரம் மண்டலத்தில், 49வது வார்டு முதல் 63வது வார்டு வரை என, 15 வார்டுகள் உள்ளன.
மேற்கண்ட இரு மண்டலங்களிலும், நிரந்தர துாய்மை பணியாளர்கள் மற்றும் என்.யு.எல்.எம்., துாய்மை பணியாளர்கள் என, முறையே 1,800 பேர், 2000 பேர் துாய்மை பணிகளை மேற்கொள்கின்றனர். தலா, 400 டன் குப்பை என, 800 டன் குப்பை தினமும் சேகரமாகிறது.
கடந்த 2010ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை, பணி ஓய்வு பெற்றவர்கள், பணியின் போது உயிரிழந்தவர்கள், விருப்பு ஓய்வு என, தலா 200 துாய்மை பணியாளர்கள் பணியிடம் காலியாகி உள்ளதால், துாய்மை பணியில் கடும் சுணக்கம் ஏற்பட்டது. வீதியெங்கும் குப்பை மலைபோல தேங்கியது.
இதையடுத்து, தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டம் வாயிலாக, தலா 200 தற்காலிக துாய்மை பணியாளர்களை நியமிக்க, அரசு அனுமதி அளித்தது.
என்.எல்.எம்., வாயிலாக நியமிக்கப்படும் தற்காலிக துாய்மை பணியாளருக்கு, நாள் ஒன்றுக்கு 657 ரூபாய் என, மாதம் 19,710 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது.
இவ்வாறு நியமிக்கப்பட்ட 200 துாய்மை பணியாளர்களில், 100க்கும் உட்பட்டோர் மட்டுமே துாய்மை பணிகளை மேற்கொள்கின்றனர்.
மீதமுள்ள 100 பேர், டிரைவர்களாகவும், பள்ளியில் காலை உணவு எடுத்தும் செல்லும் பணியிலும், மண்டலம், வார்டு அலுவலங்களில் உதவியாளர் உள்ளிட்ட மாற்றுப்பணிகளிலும் ஈடுபடுகின்றனர்.
இதனால், தண்டையார்பேட்டை மண்டலத்தில் துாய்மை பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக, சமூக ஆர்வலர்கள் கடுமையாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
அதேபோல், ராயபுரம் மண்டலத்திலும், 200 துாய்மை பணியாளர்கள் பணியிடம் காலியாகி உள்ளது. இப்பணியிடங்கள் நிரப்பப்படாததால், ராயபுரம் மண்டலத்தில் துாய்மை பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
மாற்று பணிக்கு அனுப்புவதால்
குப்பை அகற்றுவதில் சுணக்கம்தண்டையார்பேட்டை மண்டலம், 41வது வார்டு கவுன்சிலர் விமலா கூறியதாவது:துாய்மை பணிகள் மேற்கொள்வதில், 500 மீட்டர் துாரத்தில், 450 வீடுகள் என, மாநகராட்சி விதிமுறை வகுத்துள்ளது. என் வார்டில், 100 துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். 25 பேர் பற்றாக்குறை உள்ளது.இவர்களில், நிரந்தர பணியாளர்கள் விடுப்பு எடுத்தால், அவர்களுக்கு மாற்றாக, என்.யு.எல்.எம்., துாய்மை பணியாளர்களை மாற்று பணிக்கு அனுப்ப வேண்டிஉள்ளது.அதேநேரம், என்.யு.எல்.எம்., துாய்மை பணியாளர்கள் விடுப்பு எடுத்தால், அவர்களுக்கு மாற்றாக வேறு பணியாளர் வரமாட்டார்.நான்கு நாட்கள் ஆனாலும், அவர்களே குப்பையை அகற்ற வேண்டும்.மேலும், ஒரு வார்டுக்கு 10 சாலை பணியாளர்கள் இருக்க வேண்டும். இவர்கள் கட்டட கழிவுகள் அகற்றுதல், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளை செய்து வருகின்றனர்.என் வார்டில், நான்கு பேர் மட்டுமே உள்ளனர். தண்டையார்பேட்டை மண்டலத்தில், 150 பேரில் 50க்கும் உட்பட்டோரே பணிபுரிகின்றனர். இவர்களது பணியையும், தற்காலிக துாய்மை பணியாளர்களே மேற்கொண்டு வருகின்றனர். இதனால், தண்டையார்பேட்டை மண்டலத்தில் துாய்மை பணியில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளது.தற்காலிக பணியாளர்களை மாற்று பணிக்கு அனுப்புவதால், அவரவர் பகுதிகளில் துாய்மை பணியில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.