தி.நகரில் விதிமீறல் கட்டிடத்தை இடிக்க வேண்டும் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை தி.நகரில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்குமாறு சென்னை மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ரமேஷ்பாபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தி.நகர் ஹபிபுல்லா சாலையில் சுரேஷ் பாபு என்பவர் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளார். அதில் விதிமீறல் உள்ளது. எந்த கட்டிட அனுமதியும் பெறாமல் முதல் தளத்தை கட்டியுள்ளார். இது தொடர்பாக மனு அளித்தும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்மந்தப்பட்ட கட்டிடம் குறித்து மாநகராட்சி பொறியாளர்கள் ஆய்வு செய்ததில் விதிமீறல் உள்ளது தெரியவந்துள்ளது என்றும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தை உடனடியாக இடிக்க நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *