சென்னை ஏர்போர்ட் தனியார்மயமாகாது அமைச்சர் ராம்மோகன் நாயுடு உறுதி

சென்னை”சென்னை விமான நிலையம் தனியார் மயமாகாது. தேவையான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்,” என, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.

விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் குறைந்த விலை உணகவத்தை திறந்து வைத்தார்.

பின், விமான நிலைய வளர்ச்சி பணிகள் மற்றும் பயணியரின் வசதிக்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின், அவர் அளித்த பேட்டி:

நாட்டின் கிழக்கு நுழைவு வாயிலாக உள்ள சென்னை விமான நிலையம், தற்போது, 2.2 கோடி பயணியர் கையாளுன் திறன் கொண்டது. இவற்றை, 3.5 கோடியாக உயர்ததும் வகையில், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்தின் இரண்டாம் கட்ட பணிகள், அடுத்தாண்டு மார்ச்சில் செயல்பாட்டிற்கு வரும். சென்னை விமான நிலையம் தனியார்மயம் ஆக்கும் திட்டம் ஏதும் இல்லை. இட வசதிக்கேற்ப வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

பெரிய ரக விமானங்கள் ஒரே நேரத்தில் ரன்வேயில் தரையிறங்குவதால் சற்று சிக்கலாக உள்ளது. எனவே, இரண்டு ஒடுபாதையும் ஒரே நேரத்தில் இயக்க முயற்சி நடந்து வருகிறது.

பார்க்கிங் பகுதியில் இருந்து முனையங்களுக்கு பயணியர் செல்ல துாரமாக இருப்பதாக புகார்கள் வருகின்றன. அதிகாரிகளுடன் பேசி தீர்வு காணப்படும்.

சென்னையில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்ல பயணியர் ஆர்வம் காட்டுகின்றனர். இதுகுறித்து, விமான நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்படும்.

வியட்நாமுக்கு விமானங்கள் இயக்குவதற்கான ஒப்பந்தங்களில், சென்னை விமான நிலையம் விடுபட்டுள்ளதாக கேள்வி வருகிறது; விரைவில் ஒப்பந்தங்களில் சென்னை விமான நிலையம் சேர்க்கப்படும்.

இவ்வாறு, ராம்மோகன் நாயுடு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *