இளைஞருக்கு வெட்டு வாலிபர்கள் இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை: கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, பிப்.28: முன் விரோதத்தால் இளைஞரை வெட்டிய வழக்கில் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வியாசர்பாடி கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (23). இவர் அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்பவரின் பாட்டியிடம் பணம் கடன் வாங்கி தராமல் ஏமாற்றியதாகவும், அதனால் சதீசுக்கும், ஜெகதீசுக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 2020 அக்டோபர் 8ம் ேததி தனது வீட்டின் முன்பு சாப்பிட்டுக் கொண்டிருந்த சதீசை விக்கி (31), ஜெகதீஸ்வரன் (23) ஆகியோர் கத்தியால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த சதீஷ், சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பினார். இதுதொடர்பாக வியாசர்பாடி போலீசார் இருவரையும் கைது செய்து அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை 16வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஆபிரகாம் லிங்கன் முன்பு விசாரணைக்கு வந்தது. போலீசார் தரப்பில் கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் டி.மகாராஜன் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய சாட்சிகள் மற்றும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் விக்கி, ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.