சொத்து பத்திரம் தொலைத்த வங்கி ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம், எண்ணெய்காரன் தெருவில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை உள்ளது. இங்கு கிளர்க்காக பணியாற்றிய தனசேகரன், 2021ல் ஓய்வு பெற்றார். பணியில் இருந்தபோது, வங்கியில் தன் சொத்து விற்பனை பத்திரத்தை அடமானமாக வைத்து கடன் பெற்றுள்ளார்.
ஓய்வு பெறும்முன், வங்கியில் பெற்ற கடனை வட்டியுடன் சேர்த்து, 2021 ஏப்.,7ல் 1.10 லட்சம் ரூபாய் செலுத்தி விட்டார். கடன் விவகாரம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அடமானமாக வைக்கப்பட்ட சொத்து விற்பனை பத்திரம் கோரி, தனசேகரன் வங்கி நிர்வாகத்தை அணுகினார்.
வங்கி பதில் தராததால், ரிசர்வ் வங்கி உதவியை நாடினார். அந்த புகாருக்கு வங்கி நிர்வாகம், அடமானமாக வைக்கப்பட்ட சொத்து விற்பனை பத்திரம் தொலைந்து போனதாக பதிலளித்தது. பின், விற்பனை பத்திர நகலை வழங்கியது. மேலும், மூன்று மாத காலதாமதத்துக்கு இழப்பீடாக, 50,000 ரூபாயும் வழங்கியது.
இதை ஏற்க மறுத்து, தாமதமான ஒவ்வொரு நாளுக்கும், 5,000 ரூபாய் தர உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தனசேகரன் வழக்கு தொடர்ந்தா
இந்த மனு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்கள் தெளிவாக உள்ளன. அதை, வங்கி நிர்வாகம் பின்பற்றவில்லை. ரிசர்வ் வங்கி விசாரணையை துவங்கியபின்தான், அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. விசாரணையில், மூன்று மாதம் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
அந்த நாட்களுக்கு கணக்கிட்டால், 4.5 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும். இருப்பினும், வழக்கின் உண்மையைத் தன்மை கருதி, 2 லட்சம் ரூபாய் என் இழப்பீடு தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும், தடையில்லா சான்று உள்ளிட்ட மற்ற நடவடிக்கைகள் அனைத்தையும், ஆறு வாரங்களுக்குள் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.