கழிப்பறை கட்டும் பணி நெற்குன்றத்தி ல் திடீர் நிறுத்தம்
நெற்குன்றம், வளசரவாக்கம் மண்டலம் 145 வது வார்டு நெற்குன்றம் வள்ளியம்மை நகரில் சுடுகாடு அருகே அரசு நிலம் உள்ளது. அந்த இடத்தில், கழிப்பறை அமைக்க, 21 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் கோரப்பட்டு பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், கழிப்பறை பணிகளை நிறுத்த வேண்டும் என, கட்டுமான ஒப்பந்ததாரருக்கு மாநகராட்சி சார்பில் ‘நோட்டீஸ்’ வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கழிப்பறை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 145 வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் சத்யநாதன் தலைமையில் பகுதி மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கவுன்சிலர் சத்யநாதன் கூறியதாவது:
இந்த நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் கடந்த 2010ம் ஆண்டு அகற்றப்பட்டு நெற்குன்றம் ஊராட்சிக்கு சொந்தமான நிலம் என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
தொடர்ந்து மாநகராட்சியாக மாறிய பின், இடம் மாநகராட்சி பராமரிப்பில் உள்ளது.
மக்கள் பயன்பாட்டிற்காக அங்கு கட்டப்படும் கழிப்பறை கட்டும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் திடீரென நிறுத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.