மயிலாப்பூர் உள்பட 8 சட்டமன்ற தொகுதிகளில் மறுகட்டுமான திட்ட பகுதிகளில் புதிய குடியிருப்பு கட்டும் பணி மார்ச் இறுதியில் தொடக்கம்: அமைச்சர் தா.மோ. அன்பரசன் தகவல்

சென்னை, பிப்.27: மயிலாப்பூர் உள்பட 8 சட்டமன்ற தொகுதிகளில் மறுகட்டுமான திட்ட பகுதிகளில் புதிய குடியிருப்புகளை கட்டும் பணி மார்ச் மாதம் இறுதியில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கூட்ட அரங்கில் வாரியத்தால் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுகட்டுமான திட்டப்பகுதிகளின் பணி முன்னேற்றம் குறித்து சென்னை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ₹1148.85 கோடி மதிப்பீட்டில் 17 திட்ட பகுதிகளில் 6424 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என அறிவித்தார்.

அதில் ராயபுரம், பெரம்பூர், ராதாகிருஷ்ணன் நகர், துறைமுகம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, வேளச்சேரி, மயிலாப்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுகட்டுமான திட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புதாரர்களுக்கு ₹24 ஆயிரம் கருணை தொகையை உடனடியாக வழங்கி வீடுகளை காலி செய்ய வேண்டும். இந்த பணிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னின்று செய்து முடிக்க வேண்டும். அதேபோல், வரக்கூடிய நிதியாண்டில் உங்கள் தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுகட்டுமான திட்டப்பகுதிகளை தெரிவித்தால், அவை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும். மேலும், குடியிருப்புகள் காலி செய்யப்பட்ட பின் வாரிய அதிகாரிகள் அவற்றை இடித்து, புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளை வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் தொடங்க வேண்டும். புதிய இடங்களில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு அரசு துறையின் அனுமதிகளை விரைந்து பெற்று பணிகளை தொடங்க வேண்டும்.

அயோத்திதாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 40,792 குடியிருப்புகளில் பழுதுபார்ப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். இதுதவிர, வாரியத்தால் வழங்கப்பட்ட மனைகளுக்கு விற்பனை பத்திரம் வழங்குவதற்காக கடந்த 24ம் தேதி முதல் அடுத்த மாதம் 8ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் தொகுதி வாரியாக நடந்து வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு வாரிய குடியிருப்புதாரர்களுக்கு போதிய விழிப்புணர்வு அளித்து விற்பனை பத்திரங்களை பெற ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, அரவிந்த் ரமேஷ், ஆர்.டி.சேகர், வேலு, பரந்தாமன், கருணாநிதி, எழிலன், ஐட்ரீம் மூர்த்தி, வெற்றிஅழகன், எபினேசர், பிரபாகர ராஜா, சங்கர், ஹசன் மவுலானா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் அன்சுல் மிஸ்ரா, வாரிய இணை மேலாண்மை இயக்குநர் விஜயகார்த்திகேயன், வாரிய செயலாளர் காளிதாஸ், தலைமை பொறியாளர்கள் கிருஷ்ணசாமி, லால் பகதூர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *