சென்னை எல்லை ச்சாலைக்கு மண் எடுப்பதற்கு … பச்சை கொடி 2028 ல் பணிகள் முடிக்க அதிகாரிகள் இலக்கு
சென்னை எல்லை சாலை பணிகளை விரைவுபடுத்த வசதியாக, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகளில் மண் எடுக்க, தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனத்திற்கு, தமிழக அரசின் அனுமதி கிடைத்துள்ளது. இதனால், சுணங்கிய பணிகள் தற்போது வேகம் பெற்றுள்ளஜ. 2028 க்குள் குறித்த இலக்கில், திட்டத்தை நிறைவேற்றிவிட முடியும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
எண்ணுார் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகம், அதை சுற்றியுள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள், சென்னை நகரப் பகுதிக்குள் நுழைவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் துறைமுகத்திற்கு செல்ல முடியாததால், மத்திய, மாநில அரசின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், எண்ணுார் துறைமுகத்தில் துவங்கி தச்சூர், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதுார், சிங்கபெருமாள்கோவில் வழியே மாமல்லபுரத்தில் முடியும் வகையில், புதிய சாலை அமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.
புதிய சாலைத் திட்ட பணிகள், நெடுஞ்சாலைத்துறையின் கீழ் இயங்கும் தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனத்தால்,137 கி.மீ.,க்கு சென்னை எல்லை சாலை என்ற பெயரில் நடந்து வருகிறது. இதில் காட்டுப்பள்ளி துறைமுகம் – தச்சூர், தச்சூர் – திருவள்ளூர், திருவள்ளூர் – ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் – சிங்கபெருமாள் கோவில், சிங்கபெருமாள் கோவில் – மாமல்லபுரம் என ஐந்து பகுதிகளாக பிரித்து, பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முதல் இரு பிரிவுகளில் 50 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. மற்ற இரு பிரிவுகளில் தற்போது பணிகள் துவங்கியுள்ளன. ஸ்ரீபெரும்புதுார் – சிங்கபெருமாள் கோவில் இடையே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் எல்லைகளை வரையறுக்கும் வகையில், சிவப்பு கொடி கட்டப்பட்டு, பணிகள் நட்கிறது.
இந்த திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது, பாலங்கள் அமையும் இடங்களில் கட்டுமான பணி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த சாலை 10 வழிசாலையாக அமைய உள்ளது.
இது, நாட்டில் உள்ள சாலைகளில் முக்கிய சாலையாக உருவெடுக்கும். சரக்கு போக்குவரத்துக்கு பெரிதும் கைகொடுக்கும். சென்னை – திண்டுக்கல், சென்னை – பெங்களூரு, சென்னை – திருப்பதி, சென்னை – கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமையவுள்ளது.
இதற்கு, 12,301 கோடி ரூபாய் செலவு செய்யப்பட உள்ளது.
இந்த 10 வழிச்சாலையில் எட்டு வழியில் துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்களும், இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலையில் கார், அரசு மற்றும் தனியார் பேருந்து, பைக்குகள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில், திருவள்ளூர் அடுத்த வெங்கத்துார் பகுதியில் கூவம் ஆற்றில் நீண்ட மேம்பாலம் கட்டுமானம் செய்யப்பட உள்ளது. தற்போது ஆற்றில் மண் பரிசோதனை நடந்து வருகிறது.
கடந்த 2025 ஜனவரியில் துவங்கிய சென்னை எல்லைச்சாலை பணிகளை, 2028ம் ஆண்டுக்கள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
சாலை பணிகளுக்கு அதிகளவில் மண் தேவை. ஏற்கனவே, பாலவாக்கம், செங்கரை உள்ளிட்ட இடங்களில் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. விவசாயிகள், உள்ளூர் மக்கள் எதிர்ப்பு காரணமாக குறித்த அளவில் மண் எடுத்து பணிகளை முடிக்க முடியவில்லை.
வடகிழக்கு பருவமழை ஓய்ந்துள்ள நிலையில், மண் எடுக்க நீர்வளத்துறையும், கனிமவளத்துறையும், சாலை மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்துள்ளது.
இதுகுறித்து, தமிழக சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை எல்லை சாலை பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் அமைக்கப்பட உள்ளது. மழையால் சாலை மூழ்கும் என்பதால், நிலத்தில் இருந்து பல மீட்டர் உயரத்திற்கு சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கு நிரப்புவதற்கு நிலக்கரி சாம்பல் பெற முயற்சிக்கப்பட்டது. ஆனால், அனல் மின்நிலையங்களில் இருந்து அவை கிடைக்கவில்லை.
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகளில் இருந்து மண் எடுத்து பணிகளை முடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு அனுமதியும் கிடைத்துள்ளது. எனவே, குறித்த காலத்திற்குள் பணிகளை முடிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.