சென்னை துறைமுக கழக தலைவர் தகவல் ஒரே நாளில் இரண்டு லட்சம் டன் சரக்குகள் கையாண்டு சாதனை

சென்னை: சென்னை துறைமுகத்தில் ஒரே நாளில் இரண்டு லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளதாக துறைமுக கழகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு பெரிய சரக்கு கப்பல்கள் வருவது உண்டு. அதேபோல சென்னையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு கார்கள், உணவு பொருட்கள், மின்சாதன பொருட்கள் என பலவிதமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை துறைமுகத்தில் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் டன்னுக்கு மேல் சரக்குகளைக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பாலிவால் கூறியதாவது:சென்னை துறைமுகத்தில் 20ம் தேதி 2,06,848 டன், 21ம் தேதி 2,31,416 டன், 22ம் தேதி 2,46,886 டன், 23ம் தேதி 2,31,947 டன் என தொடர்ந்து 4 நாட்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் டன்னுக்கு மேல் சரக்குகளைக் கையாண்டு உள்ளோம். மேலும், சென்னை துறைமுகம் இந்த ஆண்டு ஆட்டோமொபைல் ஏற்றுமதியில் தனது குறிப்பிடத்தக்க மைல்கல்லை இரட்டிப்பாக்கியுள்ளது. ‘பபர் பார்க்கிங் யார்ட்’ செயல்பாட்டுக்கு வந்த பிறகு, சென்னை துறைமுகம் கேட் இயக்கத்தில் ஒரு புதிய அளவுகோலை அடைந்துள்ளது. இது நெரிசலைக் குறைக்கிறது. இந்த புதிய சாதனைக்கு பங்குதாரர்கள் மற்றும் துறைமுக அதிகாரிகளின் கூட்டு முயற்சிகளே காரணம்.  அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தடையற்ற ஒருங்கிணைப்பு அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

சரக்குகளை கையாளும் திறனை மேம்படுத்துதல், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் இந்தியாவின் கடல்சார் துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குதல் ஆகியவற்றில் சென்னை துறைமுகம் உறுதியாக உள்ளது. அதன் தொடர்ச்சியான மேம்பாடுகள் மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள உள்கட்டமைப்பின் மூலம், வரும் ஆண்டுகளில் இன்னும் பெரிய சாதனை படைக்க துறைமுகம் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *