பணி செய்யாத ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை.. கருப்பு பட்டியல்! 53 ‘டெண்டர்’ ரத்தால் ஆவடி மாநகராட்சி முடிவு

ஆவடி : திட்ட மதிப்பு உயர்வு, சரியாக பணிகளை மேற்கொள்ளப்படாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஆவடி மாநகராட்சியில், 53 திட்டங்களுக்கான, ‘டெண்டர்’ ரத்து செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. சரியாக பணி செய்யாவிட்டால், ஒப்பந்ததாரர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவர் என்று எச்சரித்துள்ள மாநகராட்சி நிர்வாகம், பல்வேறு பணிகளுக்கு மறு டெண்டர் கோர முடிவு செய்துள்ளது.

தமிழகத்தின் 15வது மாநகராட்சியாக, ஆவடி நகராட்சி 2019ல் தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, பருத்திப்பட்டு, சேக்காடு, மிட்னமல்லி, திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகள் இணைக்கப்பட்டன.

நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்ட ஆவடி மாநகராட்சியில், 48 வார்டுகளில் 4,526 தெருக்கள் உள்ளன. 90,000த்திற்கும் மேற்பட்டோர் சொத்து வரி செலுத்துகின்றனர். இதன் வாயிலாக, ஆண்டுதோறும்,81.60 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

ஆவடி மாநகராட்சியை பொறுத்தவரை, பொது நிதி, குடிநீர், கல்வி, பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் ஆண்டிற்கு, 100 கோடி ரூபாய் மதிப்பிற்கு ‘டெண்டர்’ விடப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் வாயிலாக பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதேநேரம், 2022 ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரை, 3.18 கோடி ரூபாய் மதிப்பில், 53 வளர்ச்சி திட்ட பணிகளுக்கு விடப்பட்ட, ‘டெண்டர்’ ரத்து செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதில், பொது நிதியில், 1.79 கோடி மதிப்பீட்டில் 36 பணிகள்; கல்வி நிதியில் 42.60 லட்சம் மதிப்பில் நான்கு பணிகள் மற்றும் குடிநீர் நிதியில் 96.80 லட்சம் மதிப்பில் 13 பணிகள் என, மொத்தம் 3.18 கோடி ரூபாய் மதிப்பில் 53 பணிகள் டெண்டர் எடுக்கப்பட்டு, பணிகள் துவக்கப்படாமலே ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘ஆவடியில், வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பல டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

‘இத்திட்டத்தில், கோபாலபுரத்தில் மூன்று பாலப்பணிகள் துவக்காமலே கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஒருங்கிணைப்பு இல்லாத, அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

விலை உயர்வு

சிறு பாலம், குழாய் நீட்டிப்பு உள்ளிட்ட சிறு பணிகளால் பெரிதாக லாபம் கிடைக்காது. அதேபோல், ‘டெண்டர்’ விடப்பட்டாலும், பணி ஆணை உடனே தருவதில்லை. சில மாதங்கள் கழித்து தான் கிடைக்கின்றன. இதற்கிடையே கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு, கூலி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பணிகள் துவங்க முடியாத சூழல் ஏற்படுகிறது. அதிகாரிகளும் இதை கண்டுகொள்வதில்லை.

– ஒப்பந்ததாரர்கள்

கருப்பு பட்டியல்

டெண்டர் எடுக்கப்பட்டு ஆறு மாதங்கள் வரை பணிகள் துவக்கப்படாமல் இருந்தால், அவை தானாக ரத்தாகி விடும். அந்த வகையில், இரண்டு ஆண்டுகளில் ‘டெண்டர்’ எடுத்து, பணிகள் மேற்கொள்ளாததால், 53 பணிகள் ரத்து செய்யப்பட்டன. தேவையை பொறுத்து, மீண்டும் ‘டெண்டர்’ விடப்பட்டு, பணிகள் துவங்கப்படும். டெண்டர் கோரிய ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணிகள் துவங்கி அரைகுறையாக கிடப்பில் போட்ட ஒப்பந்ததாரர்களும் கறுப்பு பட்டியலில் வைக்கப்படுவர்.

– மாநகராட்சி அதிகாரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *