தாம்பரம் அருகே மக்கள் எதிர்ப்பால் தடைபட்ட மூடுகால் வாய் பணி மீண்டும் தொடக்கம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு
தாம்பரம்: தாம்பரம் அருகே பொதுமக்கள் எதிர்ப்பால் தடைபட்ட மூடுகால்வாய் பணி அமைக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தின் போது இரும்புலியூர், பீர்க்கன்காரணை மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் தாம்பரம் கிழக்கு, இரும்புலியூர், அருள் நகர் அருகேயுள்ள கலங்கல் வழியாக ரயில்வே தண்டவாளத்தை கடந்து மேற்கு தாம்பரம் வழியாக அடையாறு ஆற்றுக்கு செல்லும். ஆனால், சம்பந்தப்பட்ட பகுதியில் முறையான கால்வாய் வசதி இல்லாததால் ஒவ்வொரு மழைக்காலத்தின் போதும் இரும்புலியூர் மற்றும் பீர்க்கன்காரணை பகுதிகளில் மழைநீர் குடியிருப்பு வீடுகளை சூழ்ந்துவிடும். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மழைக்காலத்தின் போது பெரிதும் பாதிக்கப்பட்டு வருவது வழக்கம்.
இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, மழைக்காலத்தில் வெளியேறும் மழை நீர் இரும்புலியூர் – ரயில்வே லைன் – முடிச்சூர் சாலை வழியாக அடையாறு ஆற்றில் கலக்கும் வகையில் 12,000 அடி நீளத்திற்கு ரூ.90 கோடி மதிப்பீட்டில் 3.8 கிலோ மீட்டார் தூரத்திற்கு 16 அடி அகலம், 9 அடி ஆழம் கொண்ட மூடுகால்வாய் அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. இதுவரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே பணிகள் நடந்துள்ளது. அங்குள்ள கே.கே நகர், ரோஜா தெரு வழியாக கால்வாய் அமைக்கப்பட்டால் மழைக்காலங்களில் அங்கு தேங்கும் மழைநீர் வெளியேறாது என கூறி அப்பகுதியில் உள்ள நல சங்க உறுப்பினர்கள் மூடு கால்வாய் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து சமீபத்தில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில். நேற்று நீர்வளத்துறை அதிகாரிகள் பணிகள் செய்ய வந்தபோது அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து, கூடுவாஞ்சேரி போலீஸ் உதவி ஆணையர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையில் பலத்த போலீசார் பாதுகாப்புடன் மூடு கால்வாய் பணி தொடங்கியது. இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.