தாம்பரம் மாநகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆணையர் திடீர் ஆய்வு
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் நேற்று நேரில் பார்வையிட்டு, தற்போதைய நிலவரம் குறித்து ஆய்வு செய்தார். தாம்பரம் மாநகராட்சி ஆணையர் சானட்டோரியம் பகுதியில் ரூ.43.40 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தாம்பரம் மாநகராட்சியின் புதிய அலுவலக கட்டிடத்திற்கான கட்டுமானப் பணியின் தற்போதைய நிலை குறித்து பார்வையிட்டார். தொடர்ந்து, 3வது மண்டலம், 25வது வார்டு, பாலாஜி நகர் பூங்காவில் ரூ.9.30 லட்சம் மதிப்பிலும், 38வது வார்டு, சங்கம் தெரு பூங்காவில் ரூ.9.08 லட்சம் மதிப்பிலும், பத்மா நகர் பூங்காவில் ரூ.9.20 லட்சம் மதிப்பிலும் நடந்து வரும் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள், 24வது வார்டு, ராதா நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள், 44வது வார்டு, சிட்லபாக்கம், ராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளியில் ரூ.68 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகள், சிட்லபாக்கம் பகுதியில் ரூ. 6.05 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து, பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து விரிவாகக் கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.