மணலியில் அடிக்கடி மின்தடை மக்கள், வணிகர்கள் கடும் அவதி
மணலி:மணலி மண்டலத்தில், எட்டு வார்டுகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு, தரை மற்றும் வான்வழி மின்வடம் வாயிலாக மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை துவங்கி மதியம் வரை, நான்கு முறைக்கு மேல், மணலி – பாடசாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் மின்தடை ஏற்பட்டதால், மக்கள் புழுக்கம் தாளாமல் கடும் அவதியுற்றனர்.
தவிர, மின்சாரத்தை நம்பியுள்ள சிறு, குறு தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. மதியம் 1:15 மணிக்கு தடைபட்ட மின்சாரம், 2:20 மணிக்கு சீரடைந்தது.
மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘மணலி – எம்.எப்.எல்., சந்திப்பு அருகே, மின்மாற்றியில் இருந்து, மின்சாரம் வினியோகமாகும் இடத்தில் பழுது ஏற்பட்டது. உடனடியாக சரி செய்யப்பட்டது’ என்றனர்.
மணலி மண்டலத்தில் மின்தடை ஏற்படும்பட்சத்தில், அவசர காலங்களில், பயன்படுத்தும் வகையில், கவுன்சிலர்கள் அலுவலகத்தில் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.