வாரிய வீடு வாங்கி தருவதாக மோசடி செய்த நபர் கைது தப்பிய குடும்பத்தினருக்கு வலை
திருமங்கலம்:தாம்பரத்தை அடுத்த சேலையூர், கர்ணம் தெருவை சேர்ந்தவர் சுந்தரம், 39. இவர், கனடாவில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு, கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், மேற்கு தாம்பரத்தை சேர்ந்த சுரேஷ், 40, மற்றும் அவரது குடும்பத்தினர் அறிமுகமாகினர்.
அப்போது, திருமங்கலம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக, சுரேஷ் கூறியுள்ளார்.
இதை நம்பிய சுந்தரம், சிறுகச் சிறுக, 14 லட்சம் ரூபாய் பணத்தை சுரேஷிடம் வழங்கினார். சில மாதங்களுக்கு முன், போலி அரசு முத்திரைகளுடன் கூடிய ஆவணங்களை தயார் செய்து, சுந்தரத்திடம் சுரேஷ் வழங்கியுள்ளார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுந்தரம், திருமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையில், சுந்தரம் தொடர்ந்த வழக்கில், நீதிமன்றமும் சுரேஷை கைது செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில், திருமங்கலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், தாம்பரத்தைச் சேர்ந்த கார்பெண்டர் வேலை செய்யும் சுரேஷை, நேற்று முன்தினம் கைது செய்தார்.
விசாரணையில், சுரேஷின் மனைவி மற்றும் உறவினர்களும் மோசடியில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில், சுரேசின் குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.