வாடகைதாரருக்கு ஓனரால் இடையூறு விசாரிக்க சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி
வியாசர்பாடி, அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முகமது ரசூல், 54. அதே தெருவில், இவருக்கு சொந்தமான வீட்டில், லியோனஸ் பிராங்கிளின், 28, என்பவர், கடந்த 15 ஆண்டுகளாக வாடகைக்கு தங்கியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த இருவாரங்களாக வாடகைதாரர் பிராங்கிளின் குடியிருக்கும் வீட்டில், முகமது ரசூல் மரக்கட்டைகள் கொண்டு வந்து வைத்துள்ளார்.
இதனால் அசவுகரியம் ஏற்பட்ட நிலையில், இது குறித்து பிராங்கிளின் முகமது ரசூலிடம் முறையிட்டுள்ளார். தீர்வு கிடைக்காத நிலையில், காவல் துறை கட்டுப்பாட்டறைக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துஉள்ளார்.
இதையடுத்து, செம்பியம் போலீசார் குறிப்பிட்ட வீட்டிற்கு சென்று பேச்சு நடத்தினர். அப்போது, மரக்கட்டைகளை சோதனையிட்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அவை, செம்மரக்கட்டைகள் என்பது தெரியவந்தது.
மொத்தம் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து, முகமது ரசூலை கைது செய்தனர்.
இவர் மீது, ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில் செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பாக, மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன.