புளியந்தோப்பு டிகாஸ்ட ர் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: பல ஆண்டு பிரச்னைக்கு தீர்வு
பெரம்பூர், பிப்.23: புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. இந்த சாலையோரம் ஏராளமான பிரியாணி கடைகள் முளைத்து 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. இரவு நேரங்களில் இங்கு வரும் குடிமகன்கள், பிரியாணி கடையில் தகராறு செய்வது மற்றும் அருகிலேயே சிறுநீர் கழிப்பது அப்பகுதி மக்களிடம் சண்டையிடுவது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து எழுந்தன. மேலும், இங்கு வரும் வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்படுவதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், மண்டல அதிகாரி முருகன் உத்தரவின் பேரில் செயற்பொறியாளர் சரவணன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேற்று காலை டிகாஸ்டர் சாலையிலுள்ள அக்கிரமிப்பு கடைகளை அகற்ற முடிவு செய்தனர். இதற்காக, மற்ற மண்டலங்களில் இருந்தும் ஆட்களை வரவழைத்து, சுமார் 50 பேர், 2 பொக்லைன் இயந்திரம் மற்றும் நவீன இயந்திரங்களோடு டிகாஸ்டர் சாலைக்கு வந்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார் உத்தரவின் பேரில் புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர், சாலையில் ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த பிரியாணி கடைகளின் மேற்கூரைள் மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றினர். பின்னர், அவற்றை லாரியில் ஏற்றி அப்புறப்படுத்தினர். இதனால் பல ஆண்டுகளாக டிக்காஸ்டர் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் நேற்று ஒரே நாளில் அகற்றப்பட்டது.