மும்பைக்கு கடத்தி விற்க முயன்ற ஒரு டன் செம்மரம் பறிமுதல்: வீட்டு உரிமையாளர் கைது

பெரம்பூர், பிப்.23: வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின் (28). இவர் நேற்று காலை, காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, தான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர், எனது வீட்டில் கட்டைகளை அடுக்கி வைத்திருப்பதாகவும், இதனால் தனக்கு தொந்தரவாக இருப்பதாகவும் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து, காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து செம்பியம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், செம்பியம் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். பின்னர், அங்கிருந்த கட்டைகளை சோதனை செய்தபோது அவை அனைத்தும் செம்மரம் என்பது தெரிய வந்தது. அந்த வீட்டில் இருந்து சுமார் 1 டன் செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், வீட்டின் உரிமையாளர் முகமது ரசூல் (54) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் முகமது ரசூல் ஆந்திராவை சேர்ந்த நாகராஜ், ஈஸ்வர்யா ஆகியோரிடம் இருந்து செம்மரத்தை வாங்கி, காரில் கடத்தி வந்து, 15 நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் அடுக்கி வைத்திருந்ததும், இதனை அவர் மும்பை போன்ற இடங்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

மேலும் முகமது ரசூல் மீது ஆந்திர மாநிலம் சித்தூரில் செம்மரக்கட்டை கடத்தியதாக 3 வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. இதுபற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர் அதன் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் வந்து பிடிபட்ட 1 டன் செம்மரத்தை பறிமுதல் செய்து முகமது ரசூலை அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *