டிட்கோ ‘பின்டெக் சிட்டி’ யில் மனை ஏக்கர் ரூ.56 கோடிக்கு ஏலம்
சென்னை,:சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையம் அருகில், 110 ஏக்கரில், 200 கோடி ரூபாய் செலவில், ‘பின்டெக் சிட்டி’ அதாவது, நிதிநுட்ப நகரை அமைக்கும் பணியில், ‘டிட்கோ’ எனப்படும் தொழில் வளர்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
முதல் கட்டமாக, 56 ஏக்கரை மேம்படுத்தி, 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் பணி துவங்கியுள்ளது. சோதனை முயற்சியாக தலா, 1.50 ஏக்கர் குத்தகைக்கு விட ஏல டெண்டர், 2024 துவக்கத்தில் கோரப்பட்டது.
இதன் வாயிலாக ஏக்கருக்கு அதிகபட்சம், 35 கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதைவிட அதிக விலை வழங்கும் நிறுவனங்களுக்கு மனைகள் ஒதுக்கிடப்படும் என, அறிவிக்கப்பட்டது. அந்த ஏலத்தில், முத்துாட் பைனான்ஸ், ஆக்சியஸ் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தேர்வாகின.
இந்த ஏலத்தில், டிட்கோ நிர்ணயம் செய்த விலையைவிட அதிகமாக ஏக்கருக்கு, 45 கோடி ரூபாய் விலை கிடைத்தது.
இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு இறுதியில், 5.23 ஏக்கரில் இரு தொழில் மனைகளும், 2.82 ஏக்கரில் மற்றொரு மனையும் குத்தகைக்கு விட ஏல டெண்டர் கோரப்பட்டது.
ஏக்கருக்கு அதிகபட்சம், 49 கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதில், 2.82 ஏக்கர் மனைக்கான ஏலத்தில் இரு நிறுவனங்களும்; 5.23 ஏக்கர் மனைகளுக்கு ஒரு நிறுவனம் மட்டும் பங்கேற்றன.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நிதிநுட்ப நகரில், 2.82 ஏக்கர் மனைக்கு இரு நிறுவனங்கள் பங்கேற்றதில், பாக்மனே குழுமம் ஏக்கருக்கு, 56 கோடி ரூபாய் விலை வழங்கி, டெண்டரில் தேர்வாகியுள்ளது. மேலும், 5.23 ஏக்கர் மனைகள் ஏலத்தில் ஒரு நிறுவனம் மட்டுமே பங்கேற்றதால், அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
நிதிநுட்ப நகரில் அரசு எதிர்பார்த்ததைவிட, தொழில் மனைகளுக்கு, நிறுவனங்களிடம் அதிக வரவேற்பு காணப்படுகிறது. விரைவில் மற்ற மனைகளும் ஏல டெண்டர்கோரி, குத்தகைக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.