எழும்பூர் சிக்னலில் தகராறு டாக்டரை தாக்கிய போலீஸ்
சென்னைவிருதுநகர் மாவட்டம், சாத்துாரைச் சேர்ந்தவர் சரவணன், 30; டாக்டர். இவர், பணி நிமித்தமாக எழும்பூர் வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, எழும்பூர் நெடுஞ்சாலை – காவலர் சாலை சந்திப்பு சிக்னலில், இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரது வாகனத்திற்கு பின்னால், ‘ஆக்டிவா’ ஸ்கூட்டரை ஓட்டி வந்தவர், ‘ஹார்ன்’ அடித்தப்படியே இருந்தார். டாக்டர் திரும்பி பார்த்து, சிக்னல் போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அப்போது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த அந்த நபர், தலைக்கவசத்தால் டாக்டரை தாக்கி உள்ளார்.
இதுகுறித்து டாக்டர் சரவணன், எழும்பூர் போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், தாக்குதலில் ஈடுபட்டவரை பிடித்து விசாரித்தனர்.
இதில், எஸ்பிளனேடு காவல் நிலைய ரோந்து வாகன ஓட்டுநர் செல்வமணி, 39, என்பதும் மதுபோதையில் டாக்டரிடம் பிரச்னை செய்ததும் தெரியவந்தது. அவரிடம், போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.