கூவமாக மாறுது ரெட்டை ஏரி

வரும் காலங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கூடுதல் நீராதாரங்களை உருவாக்கவும், ஏற்கனவே உள்ள நீராதாரங்களில், சூழலுக்கேற்ப கொள்ளளவை உயர்த்தும் பணிகளை மேற்கொள்ளவும் அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதன்படி, மாதவரம் ரெட்டேரியில், 48 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகளை நீர்வளத்துறை துவக்கியது. பருவ மழையால் நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் துவங்கியுள்ளது.

இந்நிலையில், கொரட்டூர், புத்தகரம் வழியாக வரும் மழைநீர் கால்வாயில், ஜெய்மாருதி நகர், பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலந்து ரெட்டை ஏரியில் கலக்கிறது.

அதேபோல், விநாயகபுரம், லட்சுமிபுரம் சந்திப்பு, தணிகாசலம் நகர் பகுதி கழிவுநீரும், ஏரியில் கலக்கிறது. ரெட்டை ஏரியில் கழிவுநீர் கலப்பால், கூவமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

‘மழைநீர் கால்வாயை கட்டுவது, சீரமைப்பது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. அது, மாநகராட்சியிடம் உள்ளது’ என்று குடிநீர் வாரியம் கூறுகிறது.

‘கழிவுநீர் கலப்பதை நீர்வளத்துறை தான் கவனிக்க வேண்டும்’ என்று மாநகராட்சியும்; இந்த பிரச்னையை குடிநீர் வாரியம் தான் கவனிக்க வேண்டும் என, நீர்வளத்துறையும்

மாறி மாறி கூறி வருகின்றன.

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில், கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள் இருப்பதை, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்த வேண்டும் என, சமீபத்தில் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இதில், பொது கட்டட விதிகளின் அடிப்படையில், 50க்கு மேல் வீடுகள் உள்ள குடியிருப்புகளில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

மழைநீர் கால்வாயில் கழிவுநீர் விடும் வீடுகளின் இணைப்புக்களை பாராபட்சம் காட்டாமல் துண்டிக்க வேண்டும். அப்போதுதான், ஏரியில் கழிவுநீர் கலக்கும் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.

மத்திய நிலத்தடி நீர் வாரிய தென்கிழக்கு கடலோர மண்டல இயக்குநர் சிவகுமார் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘தமிழகத்தில் நிலத்தடிநீர், 30 சதவீதம் மட்டுமே பாதுகாப்பாக உள்ளது.

நிலத்தடி நீரை செறிவூட்ட சிறிய குளங்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, 3,500 கோடி ரூபாயில் அரசு சிறப்பு திட்டம் தயாரிக்க உள்ளது’ என்று தெரிவித்தார். இந்த திட்டத்தில், ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுப்பை முக்கிய பொருளாக இணைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மழைநீர் கால்வாய் என்பது மழைக்காலங்களில் தண்ணீர் செல்வதற்கு தான். ஆனால், இப்போதும் அதில் தண்ணீர் செல்கிறது. சிட்லப்பாக்கம் ஏரியிலும் கழிவுநீர் நேரடியாக கலக்கிறது. இதை அரசுத் துறைகளின் கூட்டு முயற்சியால் மட்டுமே தடுக்க முடியும்.

— டி.நீலக்கண்ணன், தலைவர்,

தமிழ் மாநில குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு

– நமது நிருபர் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *