எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்த காங்கிரஸ் தலைவர் : வீட்டு காவலில் சிறை வைப்பு

சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் மோடி கலந்துகொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியினர் ஒரு சிலர் கருப்பு சட்டை அணிந்து “கோ பேக் மோடி” என்ற கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த நிலையில் வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் தனது ஆதரவாளர்களோடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று மதியம் “மோடியே திரும்பி போ” என்று கோஷங்களை எழுப்பினார்.

ஏற்கனவே சென்னை வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆர்ப்பாட்டங்கள், கோஷங்கள் மற்றும் வலைதளங்களில் கருத்து தெரிவித்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இந்தநிலையில் நேற்று திரவியம், பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டனத்தை தெரிவித்ததால் புதுவண்ணாரப்பேட்டை போலீசார், திரவியம் வீட்டில் இருந்து அவர் ஆதரவாளர்களோடு வெளியில் செல்லக்கூடாது என்பதற்காக அவரை வீட்டு காவலில் சிறை வைத்தனர். மேலும் அவர் வீட்டை சுற்றி போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *