பெயின்டரை கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை
சென்னை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பெயின்டர் ஜாகிர் உசேன், 25. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2017 ஜன., 27ல், விருகம்பாக்கம் மதார்ஷா தெருவில் நின்ற ஜாகிர் உசேனை, மதுபோதையில் வந்த ஸ்ரீகாந்த், 24, ரத்தினராஜ், 22, முரளி, 24, ரஞ்சித், 19, ஆகியோர் கத்தியால் குத்தியுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜாகிர் உசேன், மறுநாள் உயிரிழந்தார். விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து, நான்கு பேரையும் கைது செய்தனர். விசாரணை, சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள 15வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.
விசாரித்த நீதிபதி ஜி.புவனேஸ்வரி, ”வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஸ்ரீகாந்த் இறந்து விட்டதால், அவர் மீதான வழக்கு கைவிடப்படுகிறது. மற்ற மூன்று பேர் மீதான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பு நிரூபித்துள்ளது. எனவே, அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா, 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது,” என தீர்ப்பளித்துள்ளார்.