கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்ட முயன்ற மனைவி கைது
ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் அருகே மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் புனித்ராஜ், 44; மாம்பாக்கம் கிராம உதவியாளர்.
இவர், சுங்குவார்சத்திரம் அருகே, பாம்பாங்குழி கிராமத்தில் கிராம உதவியாளாராக பணியாற்றிய போது, அதே பகுதியைச் சேர்ந்த திலீப் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில், திலீப்பை கொலை செய்யும் திட்டத்தில் புனித்ராஜ், கூலிப்படையை ஏவி தாக்கியுள்ளார். படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரித்தனர். இதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
குடும்ப உறுப்பினர் போல் இருவரும் பழகி வந்ததால், கிராம உதவியாளர் புனித்ராஜ், திலீப் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்த நிலையில், புனித்ராஜ் மற்றும் திலீப் மனைவி ரேகாவிற்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
இது, திலீப்பிற்கு தெரியவர மனைவியை கண்டித்துள்ளார். இதனால், தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த திலீப்பை, புனித்ராஜுடன் இணைந்து தீர்த்துக்கட்ட ரேகா முடிவெடுத்துள்ளார்.
நடந்ததற்கு மன்னிப்பு கோருவது போல பேசி, கடந்த 15ம் தேதி, திலீப்பை ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் மதுக்கூடத்திற்கு புனித்ராஜ் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, இருவரும் மது அருந்தியுள்ளனர்.
இதையடுத்து, இரவு ஸ்ரீபெரும்புதுார் – – குன்றத்துார் சாலையில், பென்னலுார் அருகே திலீப்பை அழைத்து சென்றுள்ளார். புனித்ராஜ் மீதான நம்பிக்கையில் திலீப் உடன் சென்றுள்ளார்.
அங்கு, ஏற்கனவே திட்டமிட்டபடி இருவர், திலீப்பை சுத்தியலால் தலையில் சரமாரியாக தாக்க, ரத்த வெள்ளத்தில் திலீப் மயக்கமடைந்தார்
மூவரும் அங்கிருந்து தப்பியோடினர். அவ்வழியாக சென்றவர்கள் திலீப்பை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து, திலீப்பின் மனைவி ரேகா, 28, புனித்ராஜ், 44, கூலிப்படையைச் சேர்ந்த கடலுார் ராகேஷ், 35, துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்தன், 34, ஆகிய நான்கு பேரை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.