வடபழனி முருகன் கோவிலைச் சுற்றி ஆக்கிரமிப்பு அகற்றம் கண்துடைப்பா? மீண்டும் புற்றீசலாக பெருகும் நடைபாதை கடைகள்

சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்றது நுாற்றாண்டு பழமை வாய்ந்த வடபழனி முருகன் கோவில். தினமும், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்; தங்கள் நேர்த்திக்கடனையும் நிறைவேற்றுகின்றனர்.

செவ்வாய், வார விடுமுறை, விசேஷ நாட்களில், பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதுடன், நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

ஆற்காடு சாலையில் இருந்து கோவில் முகப்பு நுழைவாயிலுக்கு செல்லும் பிரதான சாலையாக, ஆண்டவர் தெரு உள்ளது. இந்த தெருவின் இருபுறமும் முளைத்துள்ள கடைகளால், நடைபாதை மற்றும் சாலை முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

அங்கு வரும் வாடிக்கையாளர்கள், சாலையில் வாகனங்களை நிறுத்துவதால், நடந்து செல்ல போதிய வழியின்றி, கோவில் நுழைவாயிலை அடைய, பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மாடவீதிகளிலும், நடைபாதை கடைகள், வாகனங்களின் ஆக்கிரமிப்பால் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

தைப்பூச விழாவின் போது இந்த ஆக்கிரமிப்புக்களால் பக்தர்கள் தவிக்ககூடும் என, நம் நாளிதழ் படத்துடன் கூடிய விரிவான செய்தி வெளியானது.

அதன் நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி, போக்குவரத்து போலீசார், காவல் துறை ஒருங்கிணைந்து, நடைபாதை மற்றும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

சில நாட்கள் கூட இது நீடிக்காத நிலையில், செவ்வாய்க்கிழமையான நேற்று, ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்

மீண்டும் முளைத்துள்ள ஆக்கிரமிப்பாளர்களால், பக்தர்கள், கோவில் நுழைவாயிலை அடையவே மிகவும் சிரமப்பட்டனர்.

‘நான் வெண்டிங் ஜோன்’

அறிவித்தும் பலன் இல்லை

சென்னை மாநகராட்சியில் மக்கள், வாகனம் அதிகம் பயன்படுத்தும் சாலைகளில், நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் நடத்தக்கூடாது. அந்த சாலைகள், ‘நான் வெண்டிங் ஜோன்’ என அடையாளப்படுத்தப்பட்டு, அதுகுறித்து விழிப்புணர்வு விளம்பர பதாகைகள் வைக்கப்படுகின்றன.

அச்சாலைகளில் பல ஆண்டுகளாக வர்த்தகம் செய்த வியாபாரிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு’வெண்டிங் ஜோன்’ பகுதியில், மாநகராட்சி அனுமதியுடன் கடையும் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், ‘நான் வெண்டிங் ஜோன்’ ஆக அறிவிக்கப்பட்ட வடபழனி, ஆண்டவர் தெரு சாலை முழுதும், அனுமதி மீறி, ஆக்கிரமிப்பு கடைகள் புற்றீசலாக பெருகி வருகின்றன. இப்பிரச்னைக்கு கண்டிப்பாக, நிரந்தர தீர்வு காண வேண்டும்.

அச்சாலையில் ஒரு குறிப்பிட்ட துாரம் வரை மட்டுமே வாகனங்கள் வர அனுமதித்து, பக்தர்களை இறக்கிவிட்டு, உடனடியாக செல்லும் வகையில் வழி செய்ய வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

– நமது நிருபர் —

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *