சென்னை ஐ.சி.எப்., ஆலையில் 2,525 ரயில் பெட்டிகள் தயாரிப்பு
சென்னை: நடப்பு நிதியாண்டில், ஐ.சி.எப்., ஆலையில் இதுவரை, 2,525 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்., எனப்படும் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில், 175 வகைகளில், 600 வடிவமைப்புகளில், ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும், 3,000க்கும் மேற்பட்ட பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.
இதுகுறித்து, ஐ.சி.எப்., அதிகாரிகள் கூறியதாவது:
பயணியருக்கான ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்குவதில், ஐ.சி.எப்., தொழிற்சாலை முன்னோடியாக உள்ளது.
சமீப காலமாக, ‘வந்தே பாரத்’ போன்ற நவீன தொழில்நுட்ப ரயில்கள் தயாரிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. முதல் வந்தே பாரத் சிலீப்பர் ரயில் தயாராக இருக்கிறது. விரைவில் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
குறைந்த செலவில் தயாரிக்கப்படும், ‘வந்தே பாரத்’ விரைவு ரயில்களை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, ‘ஆர்டர்கள்’ கிடைக்கின்றன. இருப்பினும், முதலில் உள்ளூர் தேவையை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
நடப்பு நிதி ஆண்டில், 3,226 ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டது. இதுவரை, வந்தே பாரத் ரயில்கள், எல்.எச்.பி., பெட்டிகள் உட்பட, 2,525 பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. திட்டமிட்டப்படி மீதமுள்ள பெட்டிகளையும் தயாரிப்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.