போக்சோ குற்றவாளிக்கு விரைந்து தண்டனை பெற்று தந்த திருவல்லிக்கேணி இன்ஸ் பெக்டருக்கு கமிஷனர் அருண் நேரில் பாராட்டு

ஆட்டோவில் தவறவிட்ட 40 சவரனை ஒப்படைத்த டிரைவருக்கும் வெகுமதி

சென்னை: திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் கடந்த 2020ம் ஆண்டு 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்கு பதிவு செய்து, குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தார். பின்னர் வழக்கு விசாரணையை முறையாக நடத்தி 30 வயது குற்றவாளிக்கு எதிராக சாட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை பெற்று தந்தார்.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் மகாலட்சுமியை போலீஸ் கமிஷனர் அருண் நேற்று தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினர். அதேபோல், தூத்துக்குடி மாவட்ட காவல் நிலைய வழக்கில் பல நாட்களாக தேடப்பட்டு வந்த சச்சின் (22) என்பவரை மடிப்பாக்கம் உதவி ஆய்வாளர் முருகராஜ் மற்றும் காவலர் மதன்குமார் ஆகியோர் கடந்த 12ம் தேதி மடிப்பாக்கம் ஐயப்பன் நகர் ஏரிக்கரை அருகே மடக்கி பிடித்தனர். இதையடுத்து குற்றவாளியை திறமையாக மடக்கி பிடித்த உதவி ஆய்வாளர் முருகராஜ் நேற்று காலை கமிஷனர் அருண் நேரில் அழைத்து பாராட்டினார்.

* முகப்பேர் கிழக்கு பாரதிதாசன் சாலையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணன் (40). கடந்த 15ம் தேதி வெளிமாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினரை அரும்பாக்கத்தில் இருந்து ஆட்டோவில் அண்ணாநகருக்கு சவாரியாக ஏற்றி சென்று இறங்கிவிட்டார். பின்னர், சீட்டில் ஒரு பை இருந்ததை ஆட்டோ டிரைவர் சரவணன் கவனித்தார். அதில் 40 சவரன் நகைகள் இருந்தது.

உடனே ஆட்டோ டிரைவர் சரவணன், அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து கொடுத்தார். அதனை தொர்ந்து நகைகளை தவறவிட்ட தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த நித்தேஷ் (39) என்பவரை போலீசார் கண்டுபிடித்து நகைகளை ஒப்படைத்தனர். இதையடுத்து ஆட்டோ டிரைவரின் நேர்மையை கரவிக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் தனது அலுவலகத்திற்கு ஆட்டோ டிரைவரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி கவுரவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *