இந்தியை திணிக்க முயன்றால் மீண்டும் மொழிப்போர் தொடங்கும்: வைகோ பேச்சு
தாம்பரம்: குரோம்பேட்டையில் மதிமுக இலக்கிய அணி சார்பில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறித்து அரசியலில் அறம் அகவை அறுபது (கவிசிற்பிகளின் கவிமாலை) எனும் நூல் வெளியிட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.விரமணி கலந்துக்கொண்டு நூலை வெளியிட, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது:
டெல்லிக்கு கொத்தடிமை வேலை செய்ய யாரும் தயாராக இல்லை. என்ன துணிச்சல் இருந்தால் மும்மொழி கொள்கையை தமிழகம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் ரூ.2150 ேகாடி நிதியை தரமாட்டோம் சொல்கிறார் ஒன்றிய அமைச்சர். என்ன வாய்கொழுப்பு. இதுவரை பெரியார், அண்ணா, கலைஞர் காலத்தில் இல்லாத ஆபத்து தற்போது எழுந்துள்ளது.
இந்துதுவா அமைப்புகள், சனாதான சக்திகள் தமிழகத்தில் இந்தியை புகுத்தவும், சமஸ்கிருததை நுழைக்கவும் முயற்சி செய்கிறார்கள். தர்மேந்திர பிரதான் நிதி தரமுடியாது என சொல்ல நீ யார். ஏற்கனவே சொன்னதுபோல் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா என அழைப்போம். தமிழகத்தில் இந்தியை திணிக்க முயன்றால், மீண்டும் தமிழ் மொழிக்கான போராட்டம் தொடங்கும். புதிய மொழிப்போர் தியாகிகள் வருவார்கள். இவ்வாறு அவர் பேசினார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் 101 கவிஞர்கள், மதிமுக நிர்வாகிகள், திமுக, மமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.