மாதவரம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி 100 பேர் திமுகவில் இணைந்தனர்
திருவொற்றியூர்: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாரை பற்றி அவதூறாக பேசி வருவதால், தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் தொண்டர்கள் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் சீமானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், சீமானின் பேச்சுக்கு எதிராக சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதேபோல், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்து வருகின்றனர். அதன்படி மாதவரம் தொகுதி, 26வது வார்டில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இதற்கான நிகழ்ச்சி, மாதவரம் கம்பர் நகரில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ முன்னிலையில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முக்கிய தொண்டர் பிரவீன் நெடுஞ்செழியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.
அப்போது 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் நல்லாட்சி அமைய பாடுபடுவோம், என உறுதி ஏற்றனர். நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் நந்தகோபால், பகுதி செயலாளர் துக்காராம், நிர்வாகிகள் ராஜேஷ், இ.மோகன், கோட்டை மோசஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.