கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி: கோபாலபுரத்தி உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு, முதல்வர் வரும் 25ம் தேதி திறந்து வைக்கிறார்

சென்னை: கோபாலபுரத்தில் ரூ.7.79 கோடியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு குத்துச் சண்டை அகாடமி, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணியில் ரூ.3 கோடியில் கட்டப்பட்டு வரும் சிறு விளையாட்டரங்கம் ஆகியவற்றின் கட்டுமான பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் முதல்வர் சிறு விளையாட்டரங்கம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 4.068 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது.

சிறு விளையாட்டரங்கத்தின் பயிற்சிக் கூட கட்டிடம் 396 சதுர மீட்டர் பரப்பளவில் வரவேற்பு பகுதி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே உடைமாற்றும் அறைகள், கழிப்பறைகள், பொருட்கள் வைப்பறை, மேலாளர் அறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. மேலும் சிறு விளையாட்டரங்கத்தில் திறந்த வெளி பார்வையாளர் மாடம் 265 நபர்கள் அமரும் வசதியுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்.

அப்போது அவர் அளித்த பேட்டி: சென்னை கோபாலபுரத்தில் குத்துச்சண்டையில் மிகச் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நிறைய நபர்கள் உள்ளார்கள். அவர்கள் உலகத் தரத்திலான குத்துச் சண்டை அகாடமி அமைக்க வேண்டும் என்று அரசிற்கு ஒரு கோரிக்கை வைத்தார்கள். அதன் அடிப்படையில் கலைஞருடைய நூற்றாண்டை முன்னிட்டு 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோபாலபுரத்தில் சர்வதேச தரத்திலான பாக்ஸிங் அகாடமி அமைக்கும் பணியை முதல்வர் தொடங்கி வைத்தார்.

தற்போது அந்த பணிகள் முடிவுற்று வருகின்ற 25ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து இந்த அகாடமியை திறந்து வைக்க உள்ளார்கள். இந்த அகாடமி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2 கோடி ஒதுக்கீடும், சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலனின் தொகுதி மேம்பட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடும் பெற்று, அரசின் நிதி ஒதுக்கீடாக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடும் பெற்று குத்துச் சண்டை அகாடமி கட்டப்பட்டு வருகிறது.

பார்வையாளர் மாடம் 750 பேர் அமர்ந்து விளையாட்டை ரசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 2 பாக்ஸிங் ரிங் அமைய இருக்கின்றது. 2,500 சதுர அடி பரப்பளவில் இந்த மைதானம் அமைய இருக்கின்றது. மேலும் ஒரு உடற்பயிற்சிக் கூடம் மற்றும் குத்துச்சண்டை பயிற்சி ரிங்கும் அமைக்கப்பட இருக்கின்றது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நா.எழிலன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *