மோட்டார் வாகன பிரிவு ஓட்டுநர் பாலியல் புகாரி ல் ‘சஸ்பெண்ட்
புதுப்பேட்டை மோட்டார் வாகன பிரிவில் காவலராகவும், ஓட்டுனராகவும் பணிபுரிந்து வருபவர் பிரபாகர், 35. இவர் மீது, சென்னையைச் சேர்ந்த, 30 வயது பெண், திருவல்லிக்கேணி மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், கடந்த 6ம் தேதி, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்காததால், புகார் தெரித்த பெண், கமிஷனர் அலுவலகத்தில் மூன்று நாட்களுக்கு முன் மீண்டும் புகார் அளித்தார்.
தொடர்ந்து அப்பெண், பத்திரிகையாளரை சந்தித்து, ‘காவலர் பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பாக போதுமான ஆதாரங்களுடன் புகார் அளித்தேன். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்றார்.
இதுகுறித்த விசாரணைக்கு பின், அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மோட்டார் வாகன பிரிவு ஓட்டுனர் பிரபாகரை, துணை கமிஷனர் ஜெயங்கரன், நேற்று, ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது:
நான்கு மாதங்களுக்கு முன், காவலருக்கும், புகார் அளித்த பெண்ணுக்கும் முகநுால் வாயிலாக பழக்கமாகி உள்ளது. பைனான்ஸ் தொழில் செய்து வரும் அப்பெண்ணுக்கு, காவலர் உதவி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பெண் புகார் அளிக்கவே, சம்பந்தப்பட்ட காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
– நமது நிருபர் –