அதிகாரியின் குற்றச்சாட்டிற்கு கோயம்பேடு வியாபாரிகள் எதிர்ப்பு
சென்னை:சென்னை கோயம்பேடு, உணவு தானிய சந்தையில் வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது.]
இதில், உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் பேசும்போது, ”கோயம்பேடு சந்தையில், வாழைத்தார், மாம்பழம் ஆகியவை ஆபத்தான முறையில் செயற்கையாக பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
”அவ்வாறு செய்வதால், அவற்றை சாப்பிடுவோருக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்படும். எனவே, அவ்வாறு செய்யும், கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும்,” என்றார்.
அப்போது, அங்கிருந்த வியாபாரி ஒருவர், ‘பொதுவாக, அனைவரும் ஏதோ தவறு செய்வது போல் பேசுகின்றனர். விழிப்புணர்வு நிகழ்ச்சி என எங்களை அழைத்து விட்டு, மிரட்டும் தொனியில் பேசுவதா’ என, வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மற்ற வியாபாரிகளும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்ததை தொடர்ந்து, நியமன அலுவலர் சதீஷ்குமார், மேடையில் இருந்து கீழ் இறங்கி, வியாபாரிகளிடம் ‘மன்னித்து விடுங்கள்’ எனக்கூறி சமாதானப்படுத்தினார்.
கோயம்பேடு பழ வியாபாரிகள் கூறுகையில், ‘கோயம்பேடு பழ சந்தையில் சில வியாபாரிகள், ரசாயன ‘ஸ்பிரே’ வாயிலாக பழங்களை பழுக்க வைத்து வியாபாரம் செய்கின்றனர். அவர்கள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால், அனைவரும் தவறு செய்வது போல் சித்தரிக்க வேண்டாம்’ என்றனர்.