இளம் ரவுடிகளால் வியாபாரிகள், பொதுமக்கள் அச்சம் வழிப்பறி, ஹோட்டலை சூறையாடி பணம் பறிப்பு… அட்டூழியம்
சென்னை:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கஞ்சா, மது போதையில் இளம் ரவுடிகள் வழிப்பறி, ஹோட்டல் உரிமையாளர்களை கத்தியால் வெட்டுதல், பணம் பறிப்பில் ஈடுபடுதல் உள்ளிட்ட அட்டூழியங்களை செய்கின்றனர். இதனால் தொழில் நடத்த முடியாமல் வியாபாரிகளும், இரவில் வெளியே வர பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
சென்னை, அம்பத்துார் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் எதிரே, சைவ உணவகமான சுகந்தா ஹோட்டல் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் இரவு 10:45 மணிக்கு, ஹோட்டலுக்கு வந்த மூவர், இட்லி பார்சல் கேட்டுள்ளனர். அதற்கு, 150 ரூபாய் ‘பில்’ தொகை வந்த நிலையில், அவர்கள், 50 ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளனர்.
இதில், ஹோட்டல் ஊழியர்களுக்கும், அவர்களுக்கும் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின், பணம் ஏற்பாடு செய்து, உணவை வாங்கி செல்வதாக கூறி வெளியே சென்றனர்.
சிறிது நேரத்தில், வாலிபர் ஒருவர் மீண்டும் ஹோட்டலில் நுழைந்தார். அப்போது, மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால், ஹோட்டல் கேஷியர் மனோஜ்குமார், 35, என்பவரை தலையில், பலமாக வெட்டி தப்பினார்.
இதில், அங்கேயே சரிந்து விழுந்த மனோஜ்குமாரை, அங்கிருந்தோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இதே கும்பல், பாடி மேம்பாலம் அருகே, நடந்து சென்றவரிடம் கத்தியை காட்டி, அவரது மொபைல் போனையும் பறித்துள்ளது.
பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தை சேர்ந்த இளவரசு, 45, அதே பகுதியில் ஹோட்டல் வைத்துள்ளார். அந்த ஹோட்டலுக்கும் வந்த மூன்று பேர் கும்பல், சாப்பிட்டு முடித்து, பணம் தராமல் அடாவடி செய்தது.
கஞ்சா, மது போதையில் இருந்த அக்கும்பலிடம், ஹோட்டல் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, இளவரசுவை கத்தியால் வெட்டி, கடையை சூறையாடியதுடன், கல்லா பெட்டியில் இருந்த பணத்தையும் எடுத்து தப்பினர். இதில், காயமடைந்த இளவரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து, புகார்படி நசரத்பேட்டை போலீசார் விசாரித்தனர். ‘சிசிடிவி’ காட்சிகளை ஆராய்ந்த போது, பழைய குற்றவாளிகள் தான், இச்சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அதன்படி, செம்பரம்பாக்கம் சுடுகாட்டில் பதுங்கி இருந்த செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த சசிகுமார், 23, அவரது நண்பர்களான வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன், 25, முத்து, 30 ஆகியோரை, போலீசார் பிடிக்க முயன்றனர்.
அவர்கள் தப்பி ஓட முயன்ற போது தடுமாறி விழுந்ததில், மூவருக்கும் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. பின், மூவருக்கும் மருத்துவமனையில் கட்டுப்போட்ட பின், நசரத்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அக்கும்பல், நுாம்பல், மதுரவாயல் புறவழிச்சாலை உள்ளிட்ட இடங்களிலும், கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் மொபைல் போனை பறித்து வழிப்பறி செய்துள்ளனர். இதில், வழிப்பறி தொடர்பாக சில இடங்களில் புகார்கள் அளிக்கப்படவில்லை.
கஞ்சா, மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையாகும் சிறார்கள் மற்றும் இளைஞர்கள், இரவில் தனியாக நடந்து செல்வோர், இருசக்கர வாகனத்தில் செல்வோரை வழிமறித்து, பணம், மொபைல் போனை பறித்து வருகின்றனர். தற்போது, ‘சிசிடிவி’ கேமரா பொருத்தப்பட்டுள்ள ஹோட்டல்களிலும் புகுந்து, கஞ்சா போதையில் தைரியமாக பட்டா கத்தியால் வெட்டுவது, ஹோட்டல் உரிமையாளர்கள், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
போதையில் குற்றம்
சென்னை புறநகர் பகுதிகளில் ஹோட்டல் நடத்துவது பெரிய சவாலாகவும், ஒவ்வொரு நாளும் பயந்து கொண்டே நடத்த வேண்டியுள்ளது. இரவில், மது, கஞ்சா போதையில் வரும் சிறார்கள், இளைஞர்கள் சாப்பிட்டு விட்டு, பணம் கொடுக்காமல் அடாவடி செய்வர்; அநாகரிகமாகவும் பேசுவர். அவர்களால் மற்ற வாடிக்கையாளர்கள் முகம் சுளிக்கக்கூடாது என்பதால், சாப்பிட்டத்திற்கான பணம் வாங்காமல்கூட அவர்களை அனுப்பி விடுகிறோம். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்தால், இக்குற்றங்கள் குறையும்.
– ஹோட்டல் உரிமையாளர்கள்
‘காவலன்’ செயலி இருக்கு
பழைய குற்றவாளிகளான இவர்கள் மீது வழிப்பறி போன்ற வழக்குகள் உள்ளன. தற்போது மது போதையில் ஹோட்டல் உரிமையாளர், ஊழியரை தாக்கியதுடன், வழிப்பறியிலும் ஈடுபட்டுள்ளனர். குற்ற சம்பவத்தை தடுக்க பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் காவலன் செயலியை பயன்படுத்தலாம். ரோந்து போலீசாரும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.