40 சவர ன் நகையை ஒப்படைத்த ஓட்டுனரின் நேர்மைக்கு பாராட்டு
அண்ணா நகர்,:ஹைதராபாத், பராசக்தி நகரைச் சேர்ந்தவர் நித்திஷ் 39; தனியார் நிறுவன ஊழியர். இவர், உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக, மனைவி மற்றும் தந்தையுடன், சென்னை, அரும்பாக்கத்திற்கு வந்தார்.
அங்கிருந்து, நேற்று மாலை 4:00 மணிக்கு மூவரும், கிழக்கு முகப்பேரைச் சேர்ந்த சரவணன், 40, என்பவரின் ஆட்டோவில், அண்ணா நகர் ‘ஏ – பி’ பிளாக்கில் உள்ள தனியார் விடுதிக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் இறங்கிய பின், சரவணன் அங்கிருந்து சிறிது துாரம் சென்றபோது, பயணி அமரும் இருக்கையில் பை ஒன்று இருப்பதை கவனித்துள்ளார். அதை சோதித்தபோது, தங்க நகைகள் இருந்துள்ளன. உடனடியாக, அதே பகுதியில் உள்ள அண்ணாநகர் காவல் நிலையத்தில், நகைகளை சரவணன் ஒப்படைத்தார்.
போலீசார் விசாரித்து, விடுதியில் தங்கி இருந்த நித்திஷ் குடும்பத்தினரை அழைத்து, ஆய்வு செய்து 40 சவரன் நகைகள் மற்றும் டேப்பை, சரவணன் வாயிலாகவே உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
முன்னுதாரணமான ஆட்டோ ஓட்டுனர் சரவணனின் நேர்மையை, போலீசார், நித்திஷ் மற்றும் குடும்பத்தினர் பாராட்டினர்.