மணலி புதுநகர் மதுபான கடையால் மாணவியர், பெண்கள் அச்சம்
மணலிபுதுநகர் :மணலிபுதுநகரில், பிரசித்தி பெற்ற அற்புத குழந்தை இயேசு சர்ச் உள்ளது. இங்கு, குழந்தை வரம் வேண்டி, தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்வர்
விழாக்காலங்களில், கூட்டம் கட்டுக்கடங்காது. அதன் அருகேயே செயல்படும் தனியார் மேல்நிலைப் பள்ளியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் படிக்கின்றனர்.
இந்நிலையில், சர்ச் மற்றும் பள்ளி அமைந்துள்ள, பொன்னேரி நெடுஞ்சாலையின் அணுகு சாலையோரம் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
இங்கு, அதிகாலை முதலே கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதால், ‘குடி’மகன்கள் சாலையிலேயே அமர்ந்து மது அருந்துகின்றனர். மாலை வேளைகளில், மது அருந்தி ரகளை செய்யும் போதை ஆசாமிகளால், பெண்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, டாஸ்மாக் கடையை இடமாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில், அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளதென, சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.