மீனம்பாக்கம் எஸ்.ஐ .,யை தாக்கிய வாலிபர் கைது
மீனம்பாக்கம், மீனம்பாக்கம் சிக்னல் அருகேயுள்ள, ‘பாஸ்ட்புட்’ கடையில் உணவு சாப்பிட்ட நபர் பணம் கொடுக்காமல் ரகளை செய்வதாக, நேற்று முன்தினம் இரவு மீனம்பாக்கம் போலீசாருக்கு தகவல் வந்தது.
மீனம்பாக்கம் போலீஸ் ரோந்து வாகன பொறுப்பு சப் – -இன்ஸ்பெக்டர் பரதன், அங்கு சென்று நடந்ததை விசாரித்தார். அந்த நபரிடம், ‘பணம் கொடுத்து விட்டு செல்லுங்கள்’ எனக் கூறியுள்ளார்.
பணம் செலுத்துவதாக கூறிய அந்த நபர், கடையில் இருந்து வெளியே வந்ததும் பரதனின் சீருடையை பிடித்து இழுத்து, உருட்டு கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து தப்பினார்.
காயமடைந்த எஸ்.ஐ., பரதன், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து மீனம்பாக்கம் போலீசார் விசாரித்தனர்.
இதில், எஸ்.ஐ.,யை தாக்கியது மீனம்பாக்கம், குளத்துமேடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 26, என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.