பஸ் ஊழியர்கள் 3 பேர் ‘சஸ்பெண்ட்’ பயணியுடனான மோதல் விவகாரம்

சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில், பயணியுடன் மோதிக் கொண்ட மாநகர போக்குவரத்து ஊழியர்கள் மூன்று பேர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டு உள்ளனர்.

மதுரவாயல் வடக்கு மெட்ராஸ் சாலையை சேர்ந்தவர் சரவணன், 40. இவர் கடந்த 12-ம் தேதி இரவு, கிண்டியில் உள்ள தன் அலுவலகத்தில் இருந்து, மாநகர பேருந்தில், கோயம்பேடு பஸ் நிலையம் சென்றார்.

பின், மதுரவாயலில் உள்ள தன் வீட்டுக்குச் செல்ல, பேருந்தில் ஏற முயன்றார். ஆனால், பேருந்து நிற்காமல் சென்றது.

இதையடுத்து, கோயம்பேடு பேருந்து நிலைய நேரக்காப்பாளர் அறைக்குச் சென்றார். அங்கிருந்த அலுவலர்களிடம், பேருந்தை நிறுத்தாமல் செல்வது குறித்து கேட்டார். அப்போது, கோபமாக திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த போக்குவரத்து துறை ஊழியர்கள், சரவணனை தாக்கினர். இதில், அவரது மூக்கில் ரத்த காயம் ஏற்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சரவணனை, போக்குவரத்து ஊழியர்கள் தாக்கும் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவு வெளியானது.

இது தொடர்பாக, மாநகர போக்குவரத்துக் கழகம் அளித்த விளக்கம்:

கோயம்பேட்டில் பயணி தாக்கப்பட்டது குறித்து விசாரணை நடந்தது. நேரக்காப்பாளரிடம் பயணி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், இழிவான வார்த்தைகளை கூறி திட்டியதாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில், கைகலப்பானதாகவும் தெரிய வருகிறது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட போக்குவரத்து கழக ஊழியர்கள் மூவரும் உடனே, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகள், இனி வரும் காலங்களில் நடக்காமல் இருக்க, உரிய

நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *