கும்மிடியில் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி மேல்பாக்கம் கிராமத்தில், மக்கள் நான்கு தலைமுறையாக வசிக்கின்றனர். நில அளவை பதிவேட்டில்,வனத்துறையின் காப்பு காடாக மாற்றலானது.
இதனால், அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றக்கோரி, 2023ம் ஆண்டு தனி நபர் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, மேல்பாக்கம் கிராமத்தில் நேற்று காலை, கும்மிடிப்பூண்டி தாசில்தார் சரணவகுமாரி தலைமையில், வனத்துறை அதிகாரிகள், 300 போலீசாரின் உதவியுடன் வீடுகளை அகற்ற சென்றனர். கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டனர். தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் 26 பேரை குண்டுகட்டாக துாக்கிச் சென்று, மண்டபத்தில்அடைத்தனர்.
கிராமத்தின் வீடுகளை காலி செய்ய ஒரு மாதம் அவகாசம் கேட்டனர். அவகாசம் தர மறுத்த அதிகாரிகள், ‘பொக்லைன்’ இயந்திரம் வாயிலாக, வீடுகளை இடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஆக்கிரமிப்பு அகற்றலை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு, அரசு அலுவலர்களிடம் காண்பிக்கப்பட்டது.
இதனால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கைது செய்யப்பட்டோர் விடுவிக்கப்பட்டனர்.