ரூ.350 கோடியில் உருவாகும் 27 மாடி கட்டடம் சென்ட்ரல் கோபுரம் தரை தளத்தில் பார்க்கிங்; உச்சியில் ஹோட்டல்

சென்னை :சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 550 கோடி ரூபாயில் சென்ட்ரல் சதுக்கம் உருவாகிறது. இதன் ஒரு பகுதியாக, 350 கோடி ரூபாய் மதிப்பில், 27 மாடிகள் கொண்ட சென்ட்ரல் கோபுர கட்டடம் கட்ட, முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு மையங்கள் என, பல்வேறு வசதிகளுடன் அமையும் இந்த கட்டடத்தை, சென்னையின் அடையாள சின்னமாக்கும் வகையில், அரசும், மெட்ரோ ரயில் நிர்வாகமும் கைகோர்த்து பணிகளை துவக்கியுள்ளன.

சென்னையின் முக்கிய சந்திப்பு மையமாக சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளது. இதைச் சுற்றி, புறநகர் சென்ட்ரல் ரயில் முனையம், பூங்கா நகர் ரயில் நிலையம், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம், ரிப்பன் மாளிகை, தெற்கு ரயில்வே தலைமையகம், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை ஆகியவை உள்ளன.

இந்த இடங்களுக்கு பொதுமக்கள் எளிதாக செல்லும் வகையில், பன்முக போக்குவரத்து ஒருங்கிணைப்பு மையமாக, சென்ட்ரல் சதுக்கம் அமைக்கப்பட உள்ளது. இந்த சதுக்கத்தை, சென்னையின் அடையாள சின்னமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் தலா 50 சதவீத பங்களிப்புடன் இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. இதற்காக, தமிழக அரசால், சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்நிறுவனம் வாயிலாக, தரைத்தளம் மற்றும் 27 மாடிகளுடன், 350 கோடி ரூபாய் மதிப்பில், சென்ட்ரல் கோபுரம் கட்டப்பட உள்ளது. இங்கு, ஏற்கனவே கட்டப்பட்டுள்ள நான்கு அடித்தளங்களுடன், 14,280 சதுர மீட்டர் பரப்பளவில், சென்ட்ரல் கோபுரம், 27 மாடி கட்டடமாக அமைய உள்ளது.

இதில், தரைத்தளம் மற்றும் நான்கு தளங்கள் வரை சில்லரை வணிகத்திற்காகவும், 5 முதல் 24 தளங்கள் வரை அலுவலக தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும், 25வது தளம் சேவைகளுக்காகவும், 26, 27வது தளங்கள் வணிக பயன்பாட்டிற்காகவும் ஒதுக்கப்பட உள்ளன.

சென்ட்ரல் கோபுர கட்டடத்திற்கு, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

தலைமை செயலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சேகர்பாபு, ராஜா, தலைமை செயலர் முருகானந்தம், சிறப்பு முயற்சிகள் துறை செயலர் கோபால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குனர் சித்திக், தொழில் துறை செயலர் அருண்ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

சென்ட்ரல் சதுக்கம், 550 கோடி ரூபாயில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பன்முக போக்குவரத்து மையமாக அமையும் முக்கியமான திட்டமாகும்.

சென்ட்ரல் சதுக்கத்தில் ஒரு பகுதியாக, 27 மாடி கொண்ட கோபுர கட்டடம் கட்ட முடிவு செய்து, ஏற்கனவே, அடித்தள கட்டமைப்பு பணிகள், 180 கோடி ரூபாயில் முடிக்கப்பட்டு உள்ளன. அடுத்தகட்டமாக, கோபுர கட்டடங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதற்கான பணிக்கு, தற்போது அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளன. அடுத்த மூன்று ஆண்டுகளில் பணிகள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

27 வது மாடியில் ஹோட்டல்!

சென்ட்ரல் கோபுர கட்டத்தில் அமையும் வசதிகள்:  தரை தளம்: முழுதும், 24,154 சதுர மீட்டரில், 2,000 வாகனங்களை நிறுத்தும் வகையில் பிரமாண்ட வாகன நிறுத்தம் அமைக்கப்படுகிறது நான்காவது தளம் வரை, 15,510 சதுர மீட்டர் இடம் சில்லரை வணிக பயன்பாட்டிற்கும்; ஐந்து முதல் 10வது தளம் வரை, 18,616 சதுர மீட்டர் இடம் அலுவலக பயன்பாட்டிற்கும் ஒதுக்கப்படும் 11 முதல் 24 வது தளம் வரை 43,428 சதுர மீட்டர் இடம், ‘ஏ’ கிரேடு அலுவலக பயன்பாட்டிற்கு குத்தகைக்கு விடப்பட உள்ளது 25வது தளத்தில், 3,102 சதுர மீட்டர் இடத்தில் சர்வீஸ் தளம்; 26, 27வது தளங்களில், 5,823 சதுர மீட்டர் வரை ஹோட்டல்களும் அமைய உள்ளன. ேஹாட்டல்களில் சாப்பிட செல்வோர் சென்னையின் பிரமாண்டத்தை ரசிக்க முடியும் வணிக வளாகங்களில் பிரபல நிறுவனங்களின் கடைகள், உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *