செம்பாக்கம் சமுதாய நலக்கூடத்தில் துாய்மை பணியாளர்கள் ஆக்கிரமிப்பு
செம்பாக்கம்தாம்பரம் மாநகராட்சி, மூன்றாவது மண்டலம், செம்பாக்கத்தில், மண்டல அலுவலகத்தை ஒட்டி சமுதாய நலக்கூடம் உள்ளது. இங்கு, தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
ஆனால், துாய்மை பணியாளர்களின் கூடாரமாகவும், குப்பை வாகனங்களை நிறுத்தி வைக்கும் இடமாகவும், சமுதாய நலக்கூடம் மாறிவிட்டது.
இங்கு, 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், உணவு அருந்தும் கூடத்தை ஆக்கிரமித்து, குடும்பத்தோடு தங்கியுள்ளனர். சமையல் கூடத்தில் துணி காய வைக்கின்றனர். அங்கேயே பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதனால், அந்த வளாகம் குப்பையாகவும், கழிவு நீர் தேங்கியும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பை வாகனங்களை நிறுத்துவதால் பெரும் துர்நாற்றம் வீசுகிறது
ஏழை மக்கள் பயன்படுத்தும் சமுதாய நலக்கூட பராமரிப்பில், மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவது, அப்பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, தி.மு.க., கவுன்சிலர்கள் கூறியதாவது:
குப்பை அகற்றும் பணி மேற்கொள்ளும், ‘அவர் லேண்ட்’ என்ற ஒப்பந்த நிறுவனம், வார்டுகளில் முறையாக குப்பை எடுப்பதில்லை. இரவு நேரத்தில், வணிக குப்பை அகற்றுவதில் செலுத்தும் கவனத்தை, வார்டுகளில் தேங்கும் குப்பையை அகற்றுவதில் காட்டுவதில்லை.
இதுகுறித்து, கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தால், கேட்பதும் இல்லை; சரிசெய்வதும் இல்லை. வாரத்திற்கு ஒருமுறை, சாலையோர குப்பையை அகற்றிவந்த வாகனம், சமீபகாலமாக வருவதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.