ஸ்ரீபெரும்புதுார் – மாமல்லபுரம் தரம் உயர்வு புதிய நகராட்சிகள் கூடுதல் வளர்ச்சி கிடைக்கும் என எதிர்பார்ப்பு
நகர்ப்புற உள்ளாட்சி சட்ட திருத்தத்தின்படி, சுற்றுலா தலமான மாமல்லபுரம், தொழிற் பூங்காக்கள் அதிகம் உள்ள ஸ்ரீபெரும்புதுார் ஆகிய பேரூராட்சிகளை, நகராட்சியாக தமிழக அரசு தரம் உயர்த்தி உள்ளது. இதன் வாயிலாக, மத்திய, மாநில அரசுகளின் கூடுதல் நிதி பெற்று, வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழகத்தில் மக்கள் தொகை அடிப்படையில் பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. அதேநேரம், 2011ம் ஆண்டுக்கு பின், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஊரக பகுதிகளில் இருந்து, நகர பகுதிகளில் குடியோறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதன்படி, தொழில் வளர்ச்சி மிகுந்த பகுதிகள், சுற்றுலா தலங்கள் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில், நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, நகராட்சியாக தரம் உயர்த்த, 30,000 எண்ணிக்கையில் மக்கள் வசிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டாலும், தரம் உயர்த்தும் வகையில், சட்ட திருத்தம் செய்யப்பட்டது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், 15 வார்டுகளுடன் உள்ள ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியின் ஆண்டு வருவாய், 10.57 கோடி ரூபாயாக உள்ளது. அங்கு, 30,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அதன் மொத்த பரப்பளவு, 19.39 சதுர கிலோ மீட்டர்.
ஸ்ரீபெரும்புதுாரை சுற்றி இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப்பாக்கம், ஸ்ரீபெரும்புதுார், வல்லம் வடகால், ஒரகடம் என, ஐந்து சிப்காட் தொழிற் பூங்காவில், ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இந்த பகுதிகளில், நாளுக்கு நாள் மக்கள் குடியேற்றம் அதிகரித்து வருவதால், மக்கள் தொகை எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
ஸ்ரீபெரும்புதுார் பொருளாதார ரீதியாக மட்டுமின்றி, ஆன்மிக தலமாகவும் உள்ளது. வைணவ மகான் ராமானுஜர் அவதார தலமாக உள்ளதால், இங்குள்ள ராமானுஜர் கோவிலுக்கும், பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
மாமல்லபுரம்
செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான மாமல்லபுரம் பேரூராட்சியில், பல்லவர் கால பாரம்பரிய சிற்பங்கள், உள்நாடு, சர்வதேச பயணியரை கவர்ந்துள்ளது. இங்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, பிரதமர் மோடி – சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோர், கடந்த 2019ல் இருநாட்டு சந்திப்பை இங்கு நடத்தினர். கடந்த 2022ல், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்தாண்டு ‘ஜி – 20’ நாடுகளின் மாநாடு உள்ளிட்டவை நடந்ததால், சர்வதேச கவனத்தையும் மாமல்லபுரம் ஈர்த்துள்ளது.
சுற்றுலா வளர்ச்சியடைந்த நிலையில் அதை சார்ந்து, விடுதிகள், சிற்பக்கூடங்கள், கைவினை பொருட்களின் விற்பனை கடைகளும், பிற தொழில்களும் பெருகியுள்ளன. இங்கு, 20,000க்கும் மேற்பட்டோர் வசித்தாலும், மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தலமாக இருப்பதால், மாமல்லபுரம் பேரூராட்சியில் இருந்து, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நகராட்சி, 12.568 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. மாமல்லபுரம், வெண்புருஷம், பூஞ்சேரி, பவழக்காரன்சத்திரம், தேவனேரி ஆகிய பகுதிகளுடன், 15 வார்டுகள் உள்ளன. இதன் ஆண்டு வருவாய், 10.28 கோடி ரூபாயாக உள்ளது.
திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எடையூர் ஊராட்சியின் கொக்கிலமேடு, வடகடம்பாடி ஊராட்சியின் பெருமாளேரி, திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டிபுலம், நெம்மேலி, வடநெம்மேலி, திருவிடந்தை ஆகிய
ஊராட்சிகளை, மாமல்லபுரம் மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உற்சாகம்
ஸ்ரீபெரும்புதுார், மாமல்லபுரம் பேரூராட்சிகள், நகராட்சியாக தரம் உயர்ந்துள்ளதால், மத்திய, மாநில அரசுகளின் நிதி அதிகம் பெற்று, கூடுதல் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும். அதனால் பகுதி வளர்ச்சி பெறுவதோடு, தங்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என, அப்பகுதி மக்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பேரூராட்சிகள் தரம் உயர்த்தப்படுவதால், பாதாள சாக்கடை, சுகாதாரமான குடிநீர், கொசு ஒழிப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த முடியும். இதன் வாயிலாக, புதிய தொழிற்சாலைகள் உருவாகுதல் போன்ற தொழில் வளர்ச்சி பெருகும்.
மாமல்லபுரத்தில் சுற்றுலா தலத்திற்கான வளர்ச்சியும் அதிகரிக்கும். அதேநேரம், பேரூராட்சியில் இருந்து, நகராட்சியாக உயரும்போது, சொத்துவரி, தொழில்வரி உள்ளிட்டவை உயரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாற்றங்கள் என்னென்ன?
பேரூராட்சியில் செயல் அலுவலர் பதவி இருந்தது. தற்போது, நகராட்சி கமிஷனராக அதிகாரி செயல்படுவார். இந்த பொறுப்பில், மற்ற நகராட்சிகளில் கமிஷனராக செயல்படுவோர் அல்லது மாநகராட்சிகளில் மண்டல அலுவலர்களாக, உதவி கமிஷனர்களாக பணியாற்றுவோர் நியமிக்கப்படுவர்.
மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில், பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவராக செயல்படுவார். அத்துடன் பொறியாளர், நிர்வாகம், வருவாய், பொது சுகாதாரம், நகரமைப்பு உள்ளிட்ட புதிய பிரிவுகள் உருவாகும்.