வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் அன்னதான திட்டம் விரிவாக்கம்: எம் எல் ஏ தொடங்கி வைத்தார்
பெரம்பூர்: வியாசர்பாடி பகுதியில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரவீஸ்வரர் கோயில் உள்ளது. மழைக்காலங்களில் இந்த கோயிலுக்குள் தண்ணீர் புகுந்து பக்தர்களுக்கு இடையூறாக இருந்தது. மேலும் இந்த கோயிலில் நிகழும் மிக முக்கிய நிகழ்வான சூரியக்கதிர் ராஜகோபுரம் வழியாக நந்தி மற்றும் நேரடியாக மூலவர் சிவலிங்கத்தின் மீது விழும் நிகழ்வுகளும் சில ஆண்டுகளாக நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கோயிலை நவீன தொழில்நுட்பத்தோடு உயர்த்த முடிவெடுக்கப்பட்டு மூலவர், அம்மன் மகா மண்டபம், நந்தி கொடிமரம், ராஜகோபுரம் என அனைத்தும் சுமார் 8.6 அடி உயரம் உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டு இதற்காக ரூ.2 கோடி செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் நேற்று பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். மேலும், புனரமைக்கப்பட்ட கோயில் குளத்தையும் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து கோயிலில் விரிவாக்கம் செய்யப்பட்ட அன்னதான திட்டத்தில் தினமும் 50 நபர்களுக்கு உணவு அளித்து வந்த நிலையில் நேற்று முதல் 100 பயனாளிகளுக்கு உணவு அளிக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்று பயனாளிகளுக்கு உணவு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் ஆனந்தி, பகுதி செயலாளர் ஜெயராமன், கோயில் செயல் அலுவலர் ஆட்சி சிவப்பிரகாசம், மேலாளர் தனசேகர் மற்றும் கோயில் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.