பூங்காவுக்காக மக்கள் வெளியேற்றம் மா.கம்யூ ., போராடும் என எச்சரிக்கை
தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டை, கருணாநிதி நகரில், ரயில்வேக்கு சொந்தமான இடத்தில், 60 ஆண்டுகளுக்கு மேலாக, 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர்.
இங்குள்ள குடியிருப்புகளை இடித்து பூங்கா அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இடிக்கப்பட உள்ள வீடுகளை, மாநகராட்சி அதிகாரிகள் குறியிட்டுள்ளனர்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ., மத்திய குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், நேற்று அப்பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
பின், அவர் கூறியதாவது:
ரயில்வே இடத்தை ரயில்வே நிர்வாகமே கேட்காதபோது, தமிழக அரசு எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை எடுத்தால், மக்கள் சாலையில் தான் நிற்பர்.
தண்டையார்பேட்டை, சைதாப்பேட்டையில் ஏழை மக்களை வெளியேற்றி, பூங்கா அமைக்கும் பணிகளை, சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும்.தொடர்ந்து பணிகளை மேற்கொண்டால், மக்களுடன் இணைந்து, மா. கம்யூ., போராடும்.
இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறினார்.