‘ஏசி’ மின்சார ரயில் இம்மாத இறுதிக்குள் ஓடும் ஒரே நேரத்தில் 4,914 பேர் பயணிக்கலாம்!

சென்னை, ”தெற்கு ரயில்வேக்காக தயாரிக்கப்பட்டுள்ள முதல், ‘ஏசி’ மின்சார ரயில், ஒரு வாரத்தில் ஒப்படைக்கப்படும்,” என, சென்னை ஐ.சி.எப்., துணை தலைமை இயந்திரவியல் பொறியாளர் உதயகுமார் கூறினார். இந்த மாத இறுதிக்குள், ‘ஏசி’ மின்சார ரயில் சேவை, சென்னையில் துவக்கப்பட உள்ளது.

சென்னை ஐ.சி.எப்., ஆலையில், தெற்கு ரயில்வேக்கான 12 பெட்டிகள் கொண்ட முதல், ‘ஏசி’ மின்சார ரயில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயிலில் அமர்ந்தபடி, 1,116 பேர், நின்றபடி, 3,798 பேர் என, மொத்தம் 4,914 பேர் பயணிக்க முடியும்.

அதிகபட்சமாக மணிக்கு, 110 கி.மீ., வேகத்தில் செல்லும். தானியங்கி கதவுகள், ஜி.பி.எஸ்., அடிப்படையிலான தகவல் தொடர்பு வசதி உள்ளது.

அனைத்து ரயில் பெட்டிகளிலும், ‘சிசிடிவி’ கேமராக்கள் இருக்கும். அவசர உதவிக்கு ஒவ்வொரு கதவு அருகிலும், ஓட்டுநருடன் பேசும் வசதி உள்பட பல சிறப்பம்சங்கள் உள்ளன.

இந்த, ‘ஏசி’ மின்சார ரயிலை காட்சிப்படுத்தல் நிகழ்வு, அண்ணாநகர் மேற்கு ரயில் நிலையம் அருகே உள்ள யார்டில் நேற்று நடந்தது.

இதுகுறித்து, சென்னை ஐ.சி.எப்., துணை தலைமை இயந்திரவியல் பொறியாளர் உதயகுமார் கூறியதாவது:

1

சென்னை ஐ.சி.எப்., ஆலையில், அதிக அளவில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. வந்தேபாரத், சிலீப்பர் வந்தே பாரத் ரயில், வந்தே மெட்ரோ ரயில் ஆகியவை தயாரித்து வழங்கி உள்ளோம். தற்போது, தெற்கு ரயில்வேக்காக, ‘ஏசி’ மின்சார ரயில் தயாரித்துள்ளோம்.

ஒரு வாரத்தில் இந்த ரயில், தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்படும். மற்றொரு, ‘ஏசி’ மின்சார ரயில் மூன்று மாதங்களில் தயாரித்து வழங்கப்படும். இந்த ரயில், மெட்ரோ ரயிலுக்கு இணையானது. இந்த ரயிலில் அதிக பேர் பயணிக்க முடியும். இந்த வகை ரயில்கள் தற்போது, மும்பையில் ஓடுகின்றன.

ஒன்பது, ‘ஏசி’ மின்சார ரயில்களை தயாரிக்க ரயில்வே வாரியம் ஆர்டர் தந்துள்ளது. நான்கு,’ஏசி’ மின்சார ரயில்கள் தயாரித்து உள்ளோம்; ஐந்து ரயில்கள் அடுத்த ஆண்டுக்குள் தயாரித்து வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வின்போது, ஐ.சி.எப்., தலைமை மின்னணு பொறியாளர்கள் பராசர், லட்சுமண சுவாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘ஐ.சி.எப்., நிர்வாகம், ‘ஏசி’ ரயிலை எங்களிடம் ஒப்படைத்ததும், ‘ஏசி’ செயல்பாடு, தானியங்கி கதவுகள் செயல்பாடு உள்ளிட்ட சில சோதனைகளை மேற்கொள்வோம். சோதனை முடிந்து இம்மாத இறுதிக்குள், சென்னையில் முதல், ‘ஏசி’ ரயில் சேவை துவங்கப்படும்’ என்றனர்.

கட்டணம் ரூ.95

மும்பை, ‘ஏசி’ மின்சார ரயிலில், தற்போது 1- 9 கி.மீ.,க்கு 35 ரூபாய், 15 கி.மீ., வரை 50 ரூபாய், 24 கி.மீ., வரை 70 ரூபாய், 34 கி.மீ.,வரை 95 ரூபாய் என, கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தெற்கு ரயில்வேயில், அதே கட்டண மாதிரியைப் பின்பற்றினால், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை, 28.6 கி.மீ. பயணத்துக்கு 95 ரூபாய் நிர்ணயிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், தெற்கு ரயில்வே அறிவித்தபிறகே கட்டண விபரம் தெரிய வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *