பைக் கேட்டு அடம்பிடித்து தீக்குளித்த இளைஞர் பலி

மதுரவாயல், மதுரவாயல், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் 42; கட்டட கழிவு தரம் பிரிக்கும் பணி செய்கிறார். இவரது மகன் ஜீவா, 19. இவரும் கூலி வேலை செய்து வந்தார். தனக்கு பைக் வாங்கி தரவேண்டும் என, தந்தையிடம் கேட்டுள்ளார். ஆனால், பைக் வாங்கி தராததால், ஆத்திரமடைந்த ஜீவா இரு தினங்களுக்கு முன் முருகன் வேலை செய்யும், மதுரவாயல், மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள ஷெட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து, குடிநீர் பாட்டிலில் பெட்ரோல் பிடித்துள்ளார். மேலும், ‘பைக் வாங்கி தரவில்லை என்றால், பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து விடுவேன்’ என, தந்தையை மிரட்டி உள்ளார்.

இருந்தும் தந்தை கண்டுகொள்ளாததால், கையில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டு, அருகே குளிர்காய்வதற்காக மூட்டி வைக்கப்பட்டிருந்த தீயின் அருகே சென்று ‘தீயில் இறங்கிவிடுவேன்’ எனக் கூறியுள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக தீ சட்டென்று ஜீவாவின் உடலில் பற்றியது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள், ஜீவாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம் ஜீவா உயிரிழந்தார். மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *