போலீஸ் போல நடித்து ரூ.17 லட்சம் வழிப்பறி
ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் மகாதீர் முகமது, 27. இவர், ராயப்பேட்டையில் உள்ள தனியார் வங்கியில், 17 லட்சம் வைப்புத்தொகை செலுத்துவதற்காக, மண்ணடியில் இருந்து இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை சென்றார்.
மெரினா, காமராஜர் சாலையில் உள்ள பார்த்தசாரதி கோவில் வளைவு அருகே சென்றபோது, மூன்று நபர்கள் அவரை வழிமறித்துள்ளனர். போலீஸ் எனக்கூறி, அவரிடம் இருந்த 17 லட்சம் ரூபாய்க்கு உரிய ஆவணங்களை கேட்டுள்ளனர்.
ஆவணங்கள் இல்லை என்றதும், மெரினா காவல் நிலையத்தில் உரிய ஆவணங்களை காண்பித்துவிட்டு பணத்தை வாங்கிச் செல்லுமாறு கூறி, மூவரும் வாகனத்தில் சென்றுவிட்டனர்.
தொடர்ந்து மகாதீர் முகமது மெரினா காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போதுதான் தெரியவந்தது, தன்னிடம் மர்மநபர்கள் மூவர் போலீஸ் போல நடித்து, 17 லட்சம் ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர். வழக்கு பதிவு செய்த மெரினா போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழக முதல்வர், அமைச்சர்கள் மற்றும் நீதிபதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தினந்தோறும் பயணிக்கும் சாலையில் போலீஸ் போல மூன்று பேர், 17 லட்சம் வழிப்பறி செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.