முடிச்சூர் சாலையில் வளைவாக கட்டப்பட்ட வடிகால்வாய் ஆக்கிரமிப்புகள்
தாம்பரம் – முடிச்சூர் சாலை, 24 மணி நேரமும் போக்குவரத்து கொண்டது. போக்குவரத்து அதிகரிப்புக்கு ஏற்றார்போல், நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகின்றன.
இதற்கு, மழைநீர் கால்வாயை வளைத்து கட்டியதே காரணம் என, அப்பகுதிவாசிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
கால்வாயை வளைவாக கட்டுவது, ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும் என, சமூக ஆர்வலர்கள் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், நெடுஞ்சாலைத் துறையினர் ஏற்கவில்லை.
ஆக்கிரமிப்புகளால், இச்சாலையில் நாள்தோறும் ‘பீக் ஹவர்’ நேரத்தில், கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதனால், எவ்வித பாரபட்சமுமின்றி, தாம்பரம் – முடிச்சூர் சாலையில் அதிகரித்து வரும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
ஜி.எஸ்.டி., சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை, கடந்த ஜூன் மாதம், போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.
ஆனால், மீண்டும் வழக்கம் போல் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டன. அதுபோல் இல்லாமல் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.