காசிமேடில் 5 பேர் கைதுக்கு எதிராக உண்ணாவிரதம் கடல் ஆமைகள் இறப்புக்கு காரணமான மீனவர்களின்.. . டீசல் மானியம் ரத்து!

கடல் ஆமைகள் இறப்பதை தடுக்கும்படி பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில், காசிமேடில், 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுக்கான டீசல் மானிய சலுகையை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட இடத்தில் மீன் பிடித்ததாகக் கூறி, ஐந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நடவடிக்கைகளைக் கண்டித்து, காசிமேடு மீனவர்கள் நேற்று, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், 2,000 விசைப்படகுகள், 5,000 பைபர் படகுகள், 500 கட்டுமரங்களில், 30,000க்கும் மேற்பட்டோர் மீன்பிடி தொழில் மேற்கொள்கின்றனர். தினமும் சராசரியாக, 100 டன் மீன் விற்பனைக்கு வருகிறது.

இந்நிலையில், சென்னை, திருவொற்றியூர் முதல் மாமல்லபுரம் வரையிலான கடற்கரைகளில், கடல் ஆமைகள் அதிக அளவில் இறந்து கரை ஒதுங்கி வருவது குறித்து, நாளிதழ்களில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து, பசுமை தீர்ப்பாயம் வழக்கு பதிந்து விசாரித்தது.

தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு

ஆமைகள் இனப்பெருக்கக் காலமான, ஜன., முதல் ஏப்ரல் வரை, குறிப்பிட்ட பகுதியில் விசைப்படகுகளை இயக்க தடை உள்ளது. இது தொடர்பாக, 2015ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதை அரசு ஏன் அமல்படுத்தவில்லை?

ஆமைகள் இனப்பெருக்கக் காலத்தில், தடை செய்யப்பட்ட பகுதிகளில் இயக்கப்படும் அதிவேக விசைப்படகுகளுக்கு அபராதம், நிரந்தர தடை விதிக்க, ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த நடைமுறையை, தமிழகத்திலும் கொண்டு வரலாம்.

ஆமைகள் இனப்பெருக்க காலமான ஜன., முதல் ஏப்ரல் வரை, ஆமைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், அதிவேக விசைப் படகுகளை இயக்க, அரசு தடை விதிக்க வேண்டும். இதை, தமிழக அரசின் தலைமை செயலர் நேரடியாக கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, நடவடிக்கையில் இறங்கிய மீன்வள துறை அதிகாரிகள், முதற்கட்டமாக 100க்கும் மேற்பட்ட, 140 விசைத்திறன் உடைய படகுகளுக்கு, துறை சார்பில் வழங்கப்படும் டீசல் மானியம், 10 நாட்களாக நிறுத்தி வைத்துள்ளனர்.

அதேபோல், சில நாட்களுக்கு முன், காசிமேடைச் சேர்ந்த ஜீவா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற ஆந்திராவைச் சேர்ந்த டும்மு, ஜீவானந்தம், செக்கா கிருஷ்ணமூர்த்தி, பெரி லட்சுமண் ஆகிய ஐந்து பேரை, வனத்துறையினர் கைது செய்தனர்; விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

தடை செய்த இடத்தில் விசைப்படகு இயக்கியதற்காக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைக்கு, மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை செங்கை சிங்காரவேலர் சிறிய இன்ஜின் விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினர், இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், 140 விசைத்திறன் விசைப்படகு மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், கடலுக்குள் செல்லாமல், வார்பு பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

சென்னை செங்கை சிங்காரவேலர் விசைப்படகு உரிமையாளர் சங்க செயல் தலைவர் ஆர்.பாலச்சந்தர் கூறியதாவது:

டிசம்பர் முதல் ஏப்ரல் வரை, ஆமைகள், இனப்பெருக்கத்திற்காக கடலோரத்திற்கு வரும். பெண் ஆமைகள் எங்கு பிறந்ததோ, அதே இடத்திற்கு தான் இனப்பெருக்கம் செய்ய வரும். தற்போது, கடற்கரை பகுதியில் அதிகளவில் பெண் ஆமைகள் இறந்துள்ளதாக, ஒரு ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

பூமி வெப்பமயமாதல், கடலில் அமைக்கப்பட்டுள்ள தனியார் தொழிற்சாலை வெளியேற்றும் கழிவுகளால் தான், ஆமைகள் இறக்கின்றன.

ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், மீனவர்கள் பிடித்து இழுத்து வரும் வலைகளால்தான் ஆமைகள் இறப்பதாக, அதிகாரிகள் மழுப்புகின்றனர். கடல் ஆமைகள் இறப்பிற்கு, இழுவை வலை காரணம் இல்லை.

அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாமல், காசிமேடில் 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுக்கு டீசல் மானியத்தை நிறுத்தி வைத்துள்ளனர். தவிர, மீனவர்கள் ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

ஆமைகள் இறப்பு விவகாரத்தில் ஏழை மீனவர்கள் மீது ஒரு நடவடிக்கை, பணக்கார முதலாளிகள் மீது ஒரு நடவடிக்கை என, பாரபட்சம் காட்டப்படுகிறது.

கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மானிய டீசலை உடனடியாக வழங்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்கவில்லையெனில், தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

7,900 முட்டை தான் கிடைத்தது: 25 ஆண்டுகளில் மிக குறைவு

ஆண்டுதோறும், டிச., – ஜன., மாதங்களில் கடல் ஆமைகள், கரையோரப் பகுதிகளுக்கு வந்து முட்டையிடும். கடந்தாண்டு, 53 இடங்களில் கடல் ஆமை முட்டைகள் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டன. இதன் வாயிலாக, 2.50 லட்சம் கடல் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன. இதில் இருந்து, 2.15 லட்சம் கடல் ஆமை குஞ்சுகள் பொரிக்கப்பட்டு கடலில் விடப்பட்டன. நடப்பு ஆண்டில், டிச., – ஜன., மாதங்களில் முட்டையிடுவதற்காக கடற்கரைக்கு வரும்போது, 1,000க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. மீனவர்கள் தடையை மீறி பயன்படுத்தும் அதிவேக விசை படகுகளே, இதற்கு காரணம் எனக கூறப்படுகிறது. இதுகுறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நடப்பு ஆண்டில் கடல் ஆமை முட்டையிடும் இடங்கள் வெகுவாக குறைந்துள்ளன. சென்னையை ஒட்டிய கடலோர பகுதிகளில், 72 இடங்களில், 7,900 கடல் ஆமை முட்டைகள் மட்டுமே சேகரிக்கப்பட்டு உள்ளன. வழக்கமாக, இந்த காலத்தில், சென்னையை ஒட்டிய பகுதிகளில், 37,000 கடல் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டன.கடந்த, 25 ஆண்டுகளில் இல்லாத வகையில், மிக குறைந்த

எண்ணிக்கையில் கடல் ஆமை முட்டைகள் கிடைத்துள்ளன. வரும் நாட்களில், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

– நமது நிருபர் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *