மன உளைச்சல் காரணமாக பெண், டிரைவர் தற்கொலை
பெரம்பூர்: வியாசர்பாடி எம்கேபி நகர் 19வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் பாலமுருகன் (48), இவர் தேனாம்பேட்டையில் செல்போன் சர்வீஸ் செய்யும் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவியும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மகள் ஜனனி (21). இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு எம்பிஏ படித்துக் கொண்டே நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் ஜனனி மட்டும் தனியாக இருந்துள்ளார். இரவு வேலை முடித்து ஜனனியின் தாயார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த மின்விசிறியில் புடவையால் ஜனனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
சென்று ஜனனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜனனிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. உடல் ரீதியாக சில பிரச்னைகள் இருந்ததாகவும் அதற்கு அவர் மருந்து மாத்திரைகள் எடுத்து வந்ததாகவும் இதன் காரணமாக, கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து எம்கேபி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
* ஓட்டேரி தாசமகான் பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி (49), ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் குருமூர்த்தி வீட்டில் படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து அந்த அறைக்கு சென்ற குருமூர்த்தியின் மனைவி கமலா, கணவர் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து குருமூர்த்தியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் வரும் வழியிலேயே குருமூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். மது போதைக்கு அடிமையான குருமூர்த்தி கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.